வரவிருக்கும் ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி அடையும் என தி நியூஸ் மினிட் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.


ஆந்திராவை கைப்பற்றுகிறதா பாஜக கூட்டணி?


ஃபேக்ட் செக் செய்ததில், பாஜக கூட்டணி வெல்லும் என கணித்து ருத்துக் கணிப்பு முடிவுகளை தி நியூஸ் மினிட் வெளியிடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுடன் மக்களவை தேர்தலும் நடைபெற்றன. வரும் ஜூன் 4ஆம் தேதி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.




ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் (YSRCP) ஆட்சி நடந்து வருகிறது. இந்த முறை, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து ஆளுங்கட்சிக்கு சவால் விடுத்து வருகிறது.


சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில், பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் தரவுகள் இடம்பெற்றுள்ளது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


@Manaanantapurtdp என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த கார்டு வெளியிடப்பட்டுள்ளது. "#CycleisComing
 #ycpantham #jaganpaniayipoyindi" என்ற தலைப்புடன் கார்டு வெளியிடப்பட்டது. இதை உறுதி செய்யுமாறு நமது வாட்ஸ்அப் எண்ணுக்கும் அந்த வைரல் புகைப்படம் அனுப்பப்பட்டிருந்தது.


உண்மை என்ன?


ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்காக இதுபோன்று எந்த கருத்துக் கணிப்பையும் தி நியூஸ் மினிட் வெளியிடவில்லை என்றும், தி நியூஸ் மினிட் செய்தியின் பழைய கட்டுரையிலிருந்து போலி கருத்துக் கணிப்பு தரவுகளுடன் தகவல் பரப்பட்டு வருவதையும் BOOM செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.


இதுகுறித்து தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எங்கள் கட்டுரையிலிருந்து ஒரு பழைய படத்தை எடிட் செய்து, அதை ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு என பொய்யாகப் பகிரப்பட்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.


 






தேர்தல் நடத்தை விதிகளின்படி, நாட்டின் பிற பகுதிகளில் இன்னும் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் எந்த நிறுவனமும்/செய்தி நிறுவனமும் எந்த புள்ளிவிவரங்களையும்/கருத்துக்கணிப்புகளையும்/தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது" என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாக, 2024 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக இதுபோன்ற பல போலி கருத்துக் கணிப்புகளை BOOM கண்டறிந்துள்ளது. 



பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக BOOM என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழிமாற்றம் செய்து சற்றே திருத்தி எழுததியுள்ளது.