விழுப்புரம்: அதிமுகவை விமர்சனம் செய்யும் வகையில் அமமுக நிர்வாகி ஒருவர் விழுப்புரத்தில் "தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு" இலவு காக்கும் கிளி என போஸ்டர் நகர பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் அதிமுக திமுக பாமக காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி தேர்தல் கருத்துக்கேட்பு கூட்டங்களையும் அரசியல் கட்சியினர் மாவட்டம் தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் மாவட்ட துனை கழக செயலாளர் சுகர்னா அதிமுக கூட்டணி அமைப்பதை விமர்சனம் செய்யும் வகையில் இலவு காக்கும் கிளி போல் கூட்டணிக்காக அதிமுக காத்திருப்பதாகவும், தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு என்று அச்சிடப்பட்டு விழுப்புரம் நகர பகுதிகளான திருவிக சாலை, காமராஜர் வீதி, விழுப்புரம் புதுச்சேரி சாலை போன்ற இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அமமுக நிர்வாகி நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் இலவு காக்கும் கிளி சித்தரித்து ஒட்டியுள்ள போஸ்டரால் விழுப்புரம் நகர பகுதிகள் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன் டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
“எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அதிமுக பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறும் எதுவும் தெரியாது ஆட்சி பொறுப்பில் அமர்த்தியவர்களுக்கு, தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் அவர் என்பதால் தமிழக மக்கள் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்” என தெரிவித்தார்.