தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பேரணி நடத்த தேமுதிக காவல்துறையினரிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக தேமுதிகவின் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
தடையை மீறி பேரணி:
இந்த சூழலில், காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையிலும் ஆயிரக்கணக்கில் குவிந்த தேமுதிக தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன், பார்த்தசாரதி, எல்.கே.சுதீஷ் தலைமையில் தடையை மீறி பேரணியில் சென்றனர். ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால் காவல்துறையால் பேரணியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், கோயம்பேட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக தரப்பில் கடந்த 5ம் தேதியே பேரணிக்கு அனுமதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது. பேரணி அனுமதி விவகாரத்தில் தொடர்ந்து காவல்துறை பதில் அளிக்காமல் இழுபறி நிலையில் இருந்ததாக தேமுதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அனுமதி மறுக்கப்பட்டதால் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜயகாந்த் நினைவிடத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிகாலையிலே கோயம்பேட்டில் குவிந்தனர்.
வழக்குப்பதிவு
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த சூழலில், அனுமதி மறுத்ததால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் விஜயகாந்தின் நினைவிடத்தில் இருந்து பேரணி தொடங்காத வகையில் குவிந்து தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் தேமுதிக-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இருப்பினும் தேமுதிகவினர் தடையை மீறி பேரணி சென்றனர். பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன். எல்.கே.சுதீஷ், சண்முகபாண்டியன் ஆகியோர் தலைமையில் பேரணி பிர்மாண்டமாக நடந்தது. திடீரென நடந்த இந்த பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், தியாகு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.