பரப்புரையின் போது அமைதியாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் மரம் மற்றும் மின்கம்பங்களில் ஏறக்கூடாது என தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
Continues below advertisement
இரண்டாவது சுற்றுப்பயணம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி தனது முதல் சுற்றுப்பயண பரப்புரையை திருச்சியில் தொடங்கினார். இதனைத்தொடர்ந்து இரண்டாவது சுற்றுப்பயணம் நாளை ( செப்டம்பர் 20 ) நாகப்பட்டிணம், திருவாரூர், ஆகிய பகுதிகளில் நடத்த இருக்கிறார் விஜய். முன்னதாக, முதல் சுற்றுப்பயணத்தின் போது தவெக தொண்டர்கள் மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் உயரமான இடங்களில் ஏறி நின்று விஜயின் பேச்சை கேட்டனர். ஆபத்தை உணராமல் தொண்டர்கள் செய்த இந்த செயல் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மின்கம்பங்களில் ஏறக்கூடாது:
இது தொடர்பாக தவெக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,”
Continues below advertisement
1. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள் (OFB Lamp Poses), மின் கம்பங்கள் (Pillars), மின்மாற்றிகள் (Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.
3. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
5. காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
6. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.
7. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
8. தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
9. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.”என்று கூறப்பட்டுள்ளது.