Vijay Tvk: தவெக மாநாட்டில் விஜயின் பேச்சுக்கு பலர் எதிர்வினைகளும் வெளியாக தொடங்கியுள்ளன.


தவெக மாநில மாநாடு:


தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் மூலம் முழு நேர அரசியல்வாதியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள, வி.சாலையில் தவெகவின் முதல் மாநில மாநாடு நடந்த முடிந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நடைபெற்ற மாநாடு, தமிழக அரசியல் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், இந்த மாநாட்டிற்கு ஒரு தரப்பினர் பேரதரவு வழங்கி வரும் நிலையில், மற்றொரு தரப்பு கடும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகிறது.


விஜயின் வித்தியாசமான அரசியல் பேச்சு: 


தமிழ்நாட்டில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளுமே பேசி பேசி வளர்ந்தவை தான். ஒவ்வொரு அரசியல் மேடையும் எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை பல அரசியல் கட்சிகளுக்கு முன்மாதிரியாக வடிவமைத்ததும் அந்த இருபெரும் கட்சிகள் தான். ஆனால், நேற்று விஜயின் உரை என்பது திராவிட கட்ச்களின் கட்டமைப்புகளுக்கு நேர் எதிராக இருந்தது. அதாவது, முக்கிய கட்சி பிரமுகர்களை வரவேற்பதிலும், கட்சி நிர்வாகிகளை பாராட்டுவதிலும் மேடையில் விஜய் கவனம் செலுத்தவில்லை. மாநாட்டின் நோக்கமான கொள்கை பிரகடனம், தங்களது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பன போன்ற பிரதான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.  


“அவர்களே, இவர்களே” சொல்லலையாம்


விஜயின் மாநாடு பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதிலிருந்து பல அரசியல் விமர்சகர்கள் பல்வேறு குறைகளை சுட்டிக் காட்டி வருகின்றனர். குறிப்பாக, மேடையில் இருந்த பிரதான நிர்வாகிகளின் பெயரைக் கூட சொல்லவில்லை, ”அவர்களே, இவர்களே” என்பது கட்சிக்காக உழைப்பவர்களுக்கு வழங்கும் மரியாதை அதைகூட விஜய் தரவில்லை, மேடையில் நிர்வாகிகளின் பெயரை உச்சரிக்காவிட்டால் கட்சி எப்படி வளரும், நிர்வாகிகளின் பெயர்களை மறந்துவிட்டாரா? பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு கூட நன்றி கூறவில்லை என்றெல்லாம், பல குறைகளை சுட்டிக் காட்டி வருகின்றனர். அதையும் தாண்டி சினிமா பாணியில் வசனங்களை பேசுவதாகவும், நிர்வாகிகளின் மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்றெல்லாம் தவெகவினருக்காக வாஞ்சையுடன் பேசி வருகின்றனர்.


தவெகவினர் சொல்வது என்ன?


அதேநேரம், மேடையில் பேசும்போதே தொழில்நுட்பம், தொழில்துறை போன்று இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு அரசியலும் மேம்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்களை சென்றடையை முடியாது என்ற கூறியபடியே தான், “அவர்களே, அவர்களே” என கூற முடியாது எனவும், அனைவரும் சமம் என்றும் பேச தொடங்கினார். அதோடு, மாநில மாநாட்டின் முக்கிய நோக்கமே கொள்கைகளை அறிவிப்பது தானே தவிர, நிர்வாகிகளை விளம்பரப்படுத்துவதற்கானது அல்ல என்று தவெக நிர்வாகிகளே பேசி வருகின்றனர். பழைய பாணியில் அரசியல் இனியும் எடுபடாது எனவும், அதைபுரிந்து கொண்டு தான் விஜய் புதிய முன்னெடுப்பை கையில் எடுத்து இருப்பதாகவும் மற்றொரு தரப்பு அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இளம் வாக்காளர்கள் ஓயாமல் மணிக்கணக்கில் பேசுவதை விருபுவதில்லை என்பதை உணர்ந்து, பாயிண்ட் டூ பாயிண்ட் பேசுவதை விஜய் தனது அரசியல் பாணியாக எடுத்துள்ளார் என்பதே உண்மை.