விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தமிழக அரசியல் களத்தில் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் மாநாட்டை பற்றிதான் பேசி வருகின்றன. இந்நிலையில், அந்த மாநாட்டை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் துர்கா தேவி குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக, ஒரு தொகுப்பாளருக்கு தேவையான குரல் வளம் அவருக்கு இல்லை, பாவனைகள் சரியாக இல்லை, அவருடைய உச்சரிப்பு சரியில்லை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் சுமாருக்கெல்லாம் சுமார் என்று ஏகத்துக்கு விமர்சனங்கள், தினமும் பசும்பாலிலேயே குளித்து பன்னீரிலேயே நீந்துபவர்கள் மாதிரியும் தாங்கள் எல்லாம் இங்கிலாந்தில் பிறந்த வெள்ளை நிறத்து பூக்கள் என்று நினைத்துக்கொண்டும் அவர் நிறம் குறித்தெல்லாம்
பேசியிருக்கிறார்கள்.
அவரை அப்படியெல்லாம் யாரும் எளிதில் விமர்சித்துவிடாது. அப்படி விமர்சித்துவிட்டால் அவர்கள் யாரும் அவ்வளவு எளிதில் எதிர்வினைகளில் இருந்து தப்பித்துச் சென்றுவிடமுடியாது. ஆனால், ஒரு பெண் என்றால் என்னவேண்டுமாலும் பேசிவிடலாம் அதிலும் பெண்ணுக்கு பெண்-தான் எதிரி என்பதுபோல சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களே துர்காதேவிக்கு எதிராக தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்திருப்பது பார்ப்பதற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொகுப்பாளர் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற விதியை வகுத்தது யார் ?
”அவுக ஊர்ல அவுக சொல்றதுதான் சட்டம், நியாயம்” என்பதுபோல் இப்போது பலருக்கும் தெரிந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருப்பவர்கள் சொல்வதுதான் நிகழ்ச்சி தொகுப்புக்கான விதி என சிலர் நினைக்கின்றார்கள். இப்படிதான் நிகழ்ச்சியை தொகுக்க வேண்டும், இப்படிதான் தொகுக்கும்போது பேசவேண்டும், இப்படிதான் உடல்மொழி இருக்க வேண்டும் என்றெல்லாம் யார் வகுத்தது ? அப்படியே இருந்தாலும் கூட அதையெல்லாம் உடைத்துப்போடுவதில் என்ன தவறு ?
இதில் ஆச்சரியம் என்னவென்றால், நிகழ்ச்சி தொகுப்பு பற்றி பேசும் தேர்ந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருப்பவர்களே அடிமேல், அடிபட்டு, பல்வேறு சிரமங்களை தாண்டி வந்து ஜெயித்தவர்கள்தான். அப்படிப்பட்டவர்களே, இப்படியான கமெண்டுகளை வீசி எறிவதை என்னவென்று சொல்வது ?
இந்நிலையில், இது பற்றியெல்லாம் விஜய் மாநாட்டு தொகுத்து வழங்கிய துர்கா தேவியிடமே நேரடியாக கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில்கள்தான் கீழே உள்ளவை :-
கேள்வி : உங்களுடைய மாநாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வந்துள்ளதே அதையெல்லாம் பார்த்தீர்களா ? அது உங்களை ஏதும் பாதித்ததா ?
பதில் : ”பார்த்தேன். அது எந்த அளவிலும் என்னை பாதிக்கவில்லை. ஏன் என்றால், இதுதான் எதிர்பார்த்த ஒன்றுதான். பல அரசியல் மேடைகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை பார்க்கும்போதெல்லாம், நான் அந்த இடத்தில் இருந்திருக்க கூடாதா ? என நினைத்தது உண்டு. நான் பேசியிருக்க வேண்டிய இடம் இது. ச்ச மிஸ் ஆகிடுச்சு என்ற ஆதங்கம் எனக்கு வரும். அப்படியான ஆதங்கம்தான், அந்த மனதின் பிரதிபலிப்புதான் அவர்கள் பதிவிட்ட பதிவுகள் எல்லாம் என்று நினைக்கிறேன்.
நான் உணர்ச்சிவசப்பட்டுதான் பேசினேன். ஏனென்றால், நான் அந்த மாநாட்டின் வெறும் தொகுப்பாளர் மட்டுமல்ல விஜயின் தீவிர ரசிகை. ஆனால், அரசியல் மேடையில் எப்படி பேச வேண்டுமோ அப்படிதான் நான் பேசினேன் என்னளவில் அதில் எந்த மாற்றமும் இல்லை. என்னோட பெஸ்ட நான் கொடுத்தேன். என்னோட அந்த உணர்ச்சிவசப்பட்ட குரல் உங்களுக்கு தொந்தரவா இருந்தா உண்மையிலேயே நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
ஆனால், நான் இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றால், இந்த இடத்திற்கு, விஜயின் மாநாட்டிற்கு யாரும் சாதாரணமாக வந்திருக்கவே முடியாது. பல கஷ்டங்கள், பாதிப்புகள், ஏளனங்கள் இவைகளையெல்லாம் கடந்துதான் இந்த இடத்தை நான் அடைந்திருக்கிறேன்.
உங்களில் ஒருத்தியாய் நான் விஜய் மாநாட்டை தொகுத்து வழங்கியதற்கு நீங்கள் எனக்கு ஆதரவாய் இருந்திருக்க வேண்டும். ஆனால், அதை நீங்கள் செய்யவில்லை. விஜய் தரப்பு நினைத்திருந்தால் பிரபலமாக இருக்கிற எத்தனையோ நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவரை இந்த மாநாட்டை தொகுக்க அழைத்திருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண பெண்ணான என்னை அழைத்து அந்த மாநாட்டை தொகுக்க வைத்ததற்கு நீங்கள் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அதையும் நீங்கள் செய்யவில்லை. பரவாயில்லை. வீட்டில் அக்கா, தங்கை செல்லமாக கோபப்படுவார்களே, ”அக்காவுக்கு மட்டும் செய்றீங்க, எனக்கு செய்யல” அந்த மாதிரி இதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றார்