நடிகர்கள் - அரசியல்

 

தமிழ்நாட்டில் கதாநாயகராக நடிக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும், தனி ரசிகர் மன்றம் இருக்கிறது. ரசிகர் மன்றம் மூலம் நடிகர்கள் தங்கள் படங்களை பிரபலப்படுத்துவது மட்டுமில்லாமல், நற்பணிகளும் செய்து வருகின்றனர். சில சமயங்களில் பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினால், இந்த ரசிகர் மன்றங்களை அரசியல் இயக்கமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.

 

தேர்தல் வெற்றி

 

அந்த வகையில், நடிகர் விஜய், "விஜய் மக்கள் இயக்கம் " என்ற பெயரில் ரசிகர் மன்றத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர் மன்றத் தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை, உள்ளாட்சி பிரதிநிதி தேர்தலில் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி அளித்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றனர்.


 

தொடர்ந்து நிர்வாகிகளை சந்திக்கும்

 

இந்த நிலையில் கடந்த 6 மாதத்தில் இதுவரை பத்திற்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி, தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். அவர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டு மக்கள் பணி செய்ய வேண்டும் எனவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். குறிப்பாக பெரிய அரசியல் கட்சிகள் கூட செய்யாத அளவிற்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை, 3 முறை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விதி சந்தித்துள்ளார். தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடத்தி வந்த விலை இல்லா உணவகத்தை, நடத்திய பொறுப்பாளர்களை சந்தித்து அவர்களுக்கு, எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை அணுகுமாறு கடந்த வாரம் பேசி இருந்தார்.

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உதவி

 

இந்தநிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கெடுக்குமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியே வந்தவுடன், தொகுதி வாரியாக சிறப்பாக மதிப்பெண் ஏற்ற மாணவ மாணவிகளுக்கு விஜய் கையால், விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக திருச்சி அல்லது மதுரை பகுதிகளில் நடத்துவதற்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

மாவட்ட தலைவர்களுக்கு திடீர் அழைப்பு

 

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்க மாவட்ட மாவட்டத் தலைவர்களுக்கு  விஜய் மக்கள் இயக்க தலைமை சார்பில் , திடீர் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பெரிய சந்திப்பானது , இன்று மாலை 5 மணி அளவில் சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுடன் விஜய் தனித்தனியாக ஆலோசனையில், ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், மாவட்டத்தை சார்ந்த தொகுதிகள், மாவட்டத்தின் புவியியல் அமைப்பு, மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் பட்டியல், தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல், உள்ளிட்ட மாவட்ட தொடர்பான பல்வேறு கேள்விகளை விஜய் கேட்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்பொழுதாவது ஒருமுறை மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வந்த விஜய், தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது அரசியல் என்று குறித்து நடிகர் விஜய், தனது பிறந்தநாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடுவார் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.