தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று முடிந்துள்ளது. ஆதவ் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்க்கு, கட்சி சார்பான மேடையில் தனி முக்கியத்துவம் கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
விஜய் பேசும்போது “பண்ணையார்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்” என உணர்ச்சியாக பேசினார். "இதுநாள் வரை களத்தில் இறங்கி மக்களை சந்திக்காமல் பனையூரில் இருந்து கொண்டு அரசியல் செய்து வரும் விஜய் , ஆதவ் , பிரசாந்த் கிஷோர் போன்ற ஆட்களை அருகில் வைத்துக்கொண்டு பண்ணையார் அரசியலைப் பற்றி பேசலாமா" என்ற கமெண்ட்களையும் சமூக வலைதளங்களில் அதிகமாக பார்க்கமுடிந்தது.
அதோடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அதற்காக தமிழ்நாட்டின் கல்வி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் பாஜக அரசை கண்டித்து மாநில உரிமைசார்ந்து கடுமையாக பேசுவார் என எதிர்பார்த்தவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
பாஜக என்ற வார்த்தையையோ , இந்தி என்ற வார்த்தையையோ கூட உச்சரிக்காமல் புரோ . . புரோ . . என பேசி மிக முக்கியமான தமிழ்நாட்டு பிரச்சனையை நார்மலைஸ் செய்யும் வேலையை செய்தார். இருமொழி கொள்கையே தங்களின் கொள்கை என அறிவித்திருந்த விஜய் தற்போது மும்மொழி கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் எனக் கூறி பாஜக அரசு நிதியை நிறுத்தி வைத்திருக்கும் போது, அதை அவர்களின் அரசியல் ஆயுதமாக எடுத்து மிகப்பெரிய அளவில் தாவெக போராடி இருக்க வேண்டும்.
ஆனால் வெறும் காமெடி மட்டுமே செய்வது அதை நீர்த்துப்போகச் செய்யும் வேலைதானே என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். விக்ரவாண்டி முதல் மாநாட்டில் தங்களின் கொள்கை தலைவர்களையும், மொழிக்கொள்கையையும் அறிவித்து முழங்கிய விஜய் தற்போது அந்த கொள்கைகளுக்கே ஆபத்து நேரும் போதும் அமைதியாக வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராகவே இருப்பதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
“ஆதவ் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இரண்டாக தவெக நிலைப்பாட்டைப் பிரிக்கலாம். ஆதவ் வருகைக்கு முன் திமுக , பாஜக எதிர்ப்பு , அதிமுக வோடு நட்பு என்ற வகையில் செயலப்பட்ட விஜய் தற்போது பாஜக வை எதிர்க்க வேண்டாம் , திமுக வை மட்டும் எதிர்ப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறார். இதற்கு காரணம் ஆதவ் மூலம் கைமாறப்பட்ட 300 கோடி ரூபாய் என கூறுகின்றனர் உளவுத்துறையினர்.
ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருக்கும் ஆதவ் மாமனார் மார்ட்டின் நிறுவனத்தை வைத்து ஆதவ் மூலம் பாஜக தனது அரசியல் காரியங்களை செய்து கொண்டுள்ளது. அதிமுக விற்கு செல்வதாக இருந்த ஆதவை தவெக பக்கம் போக வைத்ததே பாஜக தான் என்றும் , தவெக தேர்தல் வியூக வகுப்பாளர் செலவு, அரசியல் செலவு என சுமார் 300 கோடிக்கான செலவுகளுக்கு ஆதவ் பொறுப்பேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.