வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணத்தில் த.வெ.க கொடியை  அறிமுகம் செய்து வைத்தார் த.வெ.க தலைவர் விஜய்.


தமிழக வெற்றிக் கழகம்:


நடிகர் விஜய் இன்று பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து, த.வெ.க கட்சியின் பாடலை வெளியிட்டார்.


தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தை தவெக விஜய் தலைவர் மேற்கொண்டு வருகிறார். இதற்காக , அவர் சற்று தீவிரம் காட்டி வருவதை செயல்களால் பார்க்க முடிகிறது. குறிப்பாக,  தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.


கொடி:


இந்நிலையில், கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டார் தமிழக வெற்றி கழக தலைவர். கொடியில் வாகைப்பூ , இரட்டை யானைகள் சிவப்பு மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணத்தில், 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. 23 நட்சத்திரங்கள் பச்சை நிறமாகவும் , ஐந்து நட்சத்திரங்கள் நீல நிறத்திலும் இடம் பெற்றுள்ளன. 


 கொடியேற்றிய பின் பேசிய விஜய், “ இன்று நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்த கொடியைநான் அறிமுகப்படுத்தியுள்ளேன். கொடியே அறிமுகப்படுத்தியது பெருமையாக நினைக்கிறேன். இது கட்சி கொடியாக மட்டும் நான் பார்க்கவில்லை தமிழ்நாடு மக்களுக்கான எதிர் காலமாக பார்க்கிறேன்,வருகிற ஆண்டுகளில் கட்சி ரீதியாக நம்மை தயார் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்காகவும்தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக சேர்ந்து உழைப்போம்” என விஜய் தெரிவித்தார்



கொடி பொருள் என்ன? 


த.வெ.க கொடிக்கான அர்த்தத்தை, பின்னர் தெரிவிப்போம் என விஜய் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், கொடி அர்த்தம் குறித்து, சங்க காலத்தில் வாகை மலரை மன்னர்கள் பயன்படுத்தி வந்தமையால், அதோடு தொடர்பு படுத்தி வைத்து பார்க்கையில்...


”சங்ககாலத்திலிருந்து  தமிழ் நிலத்தில் வாகை மலர் இருந்து வருகிறது.  சங்க காலத்தில் போர் புரிபவர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை சூடி வருவார்கள். வாகை மலர் வெற்றியின் குறியீடாக பார்க்கப்படுகிறது.


போர் புரிய சென்ற தலைவன் திரும்பி வரும்போது கழுத்தில் அணிந்து வரும் மலர் மாலையை கொண்டே போரின் நிலையை அறிவர். வாகை மலர் அணிந்து வந்தால் வெற்றி பெற்றவர் என கருதப்படுவர் என்பதை சங்க கால பயன்பாடுகள் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில், கட்சியின் பெயர் , மலர் உள்ளிடவற்றில் வெற்றி என பொருள் வருவதை பார்க்க முடிகிறது.


ஆனால்  கொடிக்கான அர்த்தத்தை கட்சியின் மாநாட்டில் கூறுகிறேன் என விஜய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


கட்சி பாடலும் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழன் கொடி பறக்குது என பாடல் வரி துவங்குகிறது. இதையடுத்து, கட்சியின் மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.