தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


கட்சி கொடி ஏற்றி ஒத்திகை பார்த்த விஜய்: தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. வரும் 22ஆம் தேதியான வியாழக்கிழமை அன்று, தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இந்த நிலையில், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் த.வெ.கா கொடியை ஏற்றி விஜய் இன்று ஒத்திகை பார்த்துள்ளார். கட்சி அலுவலகத்திற்கு கருப்பு நிற ஆடை அணிந்து வந்த விஜய், கொடி ஏற்று ஒத்திகை பார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு கொடியின் நிறமான மஞ்சள் நிற உடையில் வந்திருந்தார். கொடி அறிமுக நிகழ்ச்சி எவ்வித பிரச்னையும் இன்றி சிறப்பாக நடைபெற மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து புஸ்ஸி ஆனந்த் விரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.


அதிரடி காட்டும் த.வெ.க: தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு நடிகர் விஜய் அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளை அதிரடியாக மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நிதானமாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். த.வெ.க. தலைவராக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.


சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் 2 ஆண்டுகளே இருப்பதால் நடிகர் விஜய் இனி அரசியல் களத்தில் விறுவிறுப்பாக செயல்பட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த கடந்த சில மாதங்களாக தக்க இடத்தை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆய்வு செய்து வந்தனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் அரசியல் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் நடத்தவே இடம் கிடைத்துள்ளதால் அங்கு நடத்தப்படும் என்று முக்கிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.