Just In




TVK Vijay Speech: ஆக்ரோஷம்.. ஆவேசம்..டாப் கியரில் ஸ்பீடை ஏற்றிய விஜய்! துள்ளிக்குதிக்கும் தவெக படை!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் அனல் பறந்த பேச்சால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகும், விறுவிறுப்பாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலம் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியில் அமர ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருப்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.
இதுவரை அமைதிப் பாதை:
கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியை சாதாரண அறிக்கை மூலம் அறிவிப்பாக வெளியிட்ட விஜய், அதன்பின்பு பல மாதங்கள் அமைதி காத்தார். பின்னர், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிற்கு பிறகு களத்தில் இறங்கத் தொடங்கினார். அரசியல் மாநாடு, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டம், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா, தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகளில் விஜய் பங்கேற்றாலும் அவரது பேச்சு அனல் பறந்ததாகவோ, ஆளுங்கட்சி மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியின் பெயரை குறிப்பிட்டோ அவர் பேசியது இல்லை.
அனல் பறந்த விஜய் பேச்சு:
இதனால், அவர் திமுக மற்றும் பா.ஜ.க. பெயரைச் சொல்ல அச்சப்படுகிறார் என்று பலரும் விமர்சித்தனர். இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனல் பறக்கும் பேச்சை பேசினார். முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இருவரையும் சரமாரியாக விமர்சித்தார்.
குறிப்பாக, மு.க.ஸ்டாலினை மன்னராட்சி முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டங்களையும் குறிப்பிட்டும், தவெக-விற்கு மட்டும் தடங்கல்களை விதிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். பெண் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு பல கேள்விகளை பா.ஜ.க.விற்கு விஜய் முன்வைத்தார்.
உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்:
அவரது அனல் தெறிக்கும் பேச்சு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் பேச்சால் தவெக நிர்வாகிகள் மட்டுமின்றி கடைநிலை தொண்டர்கள் வரை அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அவரவர் பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொருவரையும் அவரவர் வீடு, வீடாகச் சென்று சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விரைவில் சுற்றுப்பயண அறிவிப்பு:
விஜய்யின் கடைசி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், ஜனநாயகன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதால் விஜய்யை அரசியல் களத்தில் இனி அடிக்கடி காணலாம் என்றே கூறப்படுகிறது. மேலும், விரைவில் விஜய்யின் தமிழ்நாடு முழுவதுமான சுற்றுப்பயண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.