திருமாவளவன் - விஜய்:



விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் குறித்து ஒரு  புத்தகத்தைத் தொகுத்துள்ளார். இப்புத்தகத்தை, வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட, அதை தவெக தலைவர் விஜய் பெற்றுக் கொள்ளும் வகையில், முதலில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது.


இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், திருமாவளவன் பங்கேற்பார் என்ற தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்புத்தகம் குறித்தான தகவலைவிட, திருமாவளவன் விஜய் சந்திப்பானது பெரிதும் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.




விழாவில் பங்கேற்காத திருமாவளவன்:


ஆனால், விஜய்யுடன் சேர்ந்து புத்தக வெளியீட்டு விழாவில், திருமாவளவன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதலில், பங்கேற்பதாக திட்டமிடப்பட்டு இருந்தாலும், இது கூட்டணி குறித்து தேவையற்ற பேச்சுக்களை ஏற்படுத்தும் என , இந்த விழாவை திருமாவளவன் தவிர்த்ததாக கூறப்படுகிறது.
 
திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, திமுகவிற்கு எதிரான அரசியலை கையில் எடுத்து இருக்கும், தவெக உடன் மேடையை பகிர்ந்து கொள்வது, திமுக தலைமைக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 




புது ரூட்டில் ஆதவ் அர்ஜீனா: 


மேலும், விசிக கட்சியைச் சேர்ந்த , ஆதவ் அர்ஜீனா ஏற்கனவே திமுக கூட்டணியிடையான கருத்துக்கள் சர்ச்சையாகி வருகிறது. மேலும், இந்த முறை , ஒருபடி மேலே சென்று, திமுகவுக்கு எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை , அவரது புத்தக வெளியீட்டு விழாவில் அழைத்திருப்பது, அதுமட்டுமன்றி திருமாவளவனே புத்தகத்தை வெளியிட, அதை விஜய் பெற்றுக் கொள்வது என்பது, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விசிக கட்சியை, தவெக கட்சியுடன் கூட்டணிக்கான பாதையை ஆதவ் அர்ஜீனா ஏற்படுத்துகிறார் என்ற பேச்சும் அடிபட்டது.
 


கேள்விகளுக்கு இடமளித்துள்ள விசிக:


இதை , எப்படி திருமாவளவன் அனுமதிக்கிறார்? அல்லது, அவரது  அனுமதியுடன்தான், ஒருபுறம்  இதுபோன்ற உள்ளடி வேலை பார்க்கப்படுகிறதா? என்றும் கேள்விகளும் இடம்பெறுகின்றன. 
 
ஆனால், சில தினங்களுக்கு முன்பு திருமாவளவன் அளித்த பேட்டியில் கூட திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், விசிக துணைப் பொதுச் செயலாளர் புத்தக வெளியீட்டு விழா, அதுமட்டுமன்றி திருமாவளவன் கொள்கை தலைவர் அம்பேத்கர் குறித்த புத்தகம், இருவரையும் திமுக கூட்டணிக்காக புறக்கணித்துள்ளார் என்றும் பேச்சுகள் எழுந்தன.


திருமாவளவன் திமுக கூட்டணியில் உறுதி என்று சொன்னாலும், விசிக கட்சியினரின் செயல்பாடுகளை பார்க்கையில் ஒருவித சலனத்தையும் பார்க்க முடிகிறது. விசிக தலைவர் திருமாவளவன் ஒரு பக்கம், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜீனா ஒரு பக்கம் மற்றும் தொண்டர்கள் சிலர் ஒரு பக்கம் என விசிகவின் போக்கு, பல சந்தேகங்களுக்கும் இடமளித்துள்ளன. 


இந்நிலையில் 2026 தேர்தலில்தான் தெரியும்; யார், எந்த பக்கம் என்று, அதுவரை பல சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியாது என்றே சொல்லலாம்.