புவனகிரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பாஜகவின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா  சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார்.


பாஜக அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் புவனகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பங்கேற்றார். 

 

இந்த கூட்டத்தில் ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசும்போது, தமிழக அரசை விமர்சித்து பேசினார். கூட்டம் துவங்கிய நேரத்தில் அதிக அளவில் இருந்த கட்சித் தொண்டர்கள், நேரம் ஆக, ஆக கலைந்து சென்றனர். ஒரு கட்டத்தில் ஹெச். ராஜா பேசும்போது பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்திருந்த பெரும்பாலான தொண்டர்கள் வெளியேறி காலி சேர்கள் அதிக அளவில் கிடந்தது. ஆனாலும் காலியாக கிடந்த நாற்காலிகளையும், மேடைக்கு முன்புறம் அமர்ந்திருந்த கொஞ்சம் தொண்டர்களையும் பார்த்து ஹெச். ராஜா பேசினார்.

 

 கூட்டம் முடிவடைந்ததும் ஹெச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “இந்தப் பாராளுமன்ற தொகுதியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், பாஜகவினரை ஓட ஓட விரட்டுவாராம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சி கூட இல்லை. அது ஒரு மாவட்ட கட்சி. இந்த மாவட்டத்திற்கு வெளியே பெரிதாக ஒன்றும் நிர்வாகிகள் இல்லை. எங்கள் ஊர் காரைக்குடியில் நகர தலைவரே கிடையாது. ஊர் குருவி எவ்வளவு உயர பறந்தாலும் பருந்தாக முடியாது.

 

அவர் பாஜகவிற்கு எதிராக விஷம் கக்குவதற்கு காரணம் என்ன. இன்று பட்டியல் சமுதாயத்திலிருந்து அலை அலையாக பாஜகவுக்கு வருகிறார்கள். அதனால் தனது கூடாரம் காலி ஆகிறது. பட்டியல் சமுதாயத்தின் பர்சன்டேஜ் வைத்து இவர் பேரம் செய்கிறார். அதனால் திருமாவளவனை எச்சரிக்க விரும்புகிறேன். நீங்கள் சொன்னபடி வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் 24 மணி நேரத்தில் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

 

 தமிழகத்தில் இன்று உள்ள மிக முக்கிய பிரச்சனை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லை என்று சொன்னால் தமிழ்நாடு பொருளாதாரம் சரிந்து விடும் என்று முதல்வர் ஸ்டாலினே சொல்லி இருக்கிறார். எல்லோரும் பத்திரமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்தியை எதிர்த்து கோஷமிட்டவர்கள் திராவிட முன்னேற்ற கழகம். இன்று பதறுகிறார்கள் தமிழ்நாட்டில் இன்று அனைத்து தொழிற்சாலைகளிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று தொழிற்சாலைகள் கேட்கின்றன.

 

சாராயத்தை திறந்து விட்டு தமிழர்களை குடிகாரர் ஆக்கியது திமுகதான். மது இருந்த பீகார் மாநிலம் மதுவிலக்கு மாநிலமாக மாறி இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மது மாநிலமாக மாறி விட்டது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்களைப்பற்றி என்னவெல்லாம் விஷம் கக்கினார் என்பது தெரியும். அண்ணாமலை அதைக் கோடிட்டு காட்டினார். அதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. எங்கள் மாநில தலைவரை தொட்டால் தமிழ்நாடு தாங்காது. அதை நான் எச்சரிக்கை விரும்புகிறேன்.

 

தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஈரோடு தேர்தலில் என்னென்னவெல்லாம் பரிசு பொருள் கொடுத்தார்கள் என சோஷியல் மீடியா வெளிப்படுத்தியது. அப்படி ஒரு தேர்தல் நடந்து அதில் கீழ்த்தரமாக பேசக்கூடியவர் வெற்றி பெற்று இருக்கிறார். திராவிட இயக்கங்களின் முடிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதை பாஜக திறமையாக செய்து முடிக்கும்” என்றார்.

 

பீகார் மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி ஆட்சி இருக்கும்போது வேலை வாய்ப்புகள் வழங்காததால்தான் இங்கு பீகார் மக்கள் வருகிறார்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஹெச். ராஜா,

 

தமிழர்கள் டெல்லி, கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் வேலைகளில் இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. தமிழர்கள் வேலை பார்ப்பதில்லை. தமிழர்கள் சட்டையை மடித்துக்கொண்டு ஒரு கட்டிங் கிடைத்தால் போதும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் 2 குழந்தை போதுமே என்று விளம்பரம் இருந்தது. ஆனால் இப்போது செயற்கை கருவூட்டல் மைய விளம்பரங்கள் தான் இருக்கிறது. தமிழன் தன் பொண்டாட்டிக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க கூட லாயக்கில்லாமல் ஆக்கினது இந்த டாஸ்மாக் தான் என கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஹெச். ராஜாவுக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.