TN Govt Debt: தமிழ்நாடு அரசின் முடிவுகளால் ஒவ்வொரு தமிழனின் மீதும், எவ்வளவு கடன் சுமை உள்ளது என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் பட்ஜெட்:


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள, ஏற்கனவே செயல்படுத்தப்படும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதில் அரசின் மொத்த வருவாய் மற்றும் நிதிப்பற்றாக்குறை தொடர்பான விவரங்கள் இருக்கும். அந்த நிதி பற்றாக்குறையை குறைக்கும் விதமாக தான், வெளிசந்தையில் அரசு சார்பில் கடன் வாங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழ்நாடு அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு கடனில் தத்தளிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.



தமிழக அரசின் கடன்சுமை விவரம்


கடந்த 1984-85 நிதியாண்டில் வெறும் 2 ஆயிரத்து 129 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை, கிடுகிடுவென அதிகரித்து 1999-200வது நிதியாண்டில் 18 ஆயிரத்து 989 கோடியாக உயர்ந்தது. 2006ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தஒபோது, கடன் சுமை 57 ஆயிரத்து 457 கோடியாக உயர்ந்தது. அதேநேரம், 2011ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி முடிவுக்கு வந்தபோது, மாநிலத்தின் கடன் சுமார் இரண்டு மடங்காக உயர்ந்து ஒரு லட்சத்து ஓராயிரத்து 439 கோடியை எட்டியது. இதற்கடுத்து வந்த 10 ஆண்டுகால அதிமுகவின் ஆட்சியில் தான், மாநில அரசு வரலாறு காணாத அளவில் கடனை வாங்கி குவித்தது. அதன்படி, 10 ஆண்டுகால அதிமுக தலைமையிலான அரசு ரூ.4.10 லட்சம் கோடி கடன் வாங்கியது.


திமுக அரசில் மாநில அரசின் நிதிநிலை


2021ம் ஆண்டு திமுக பொறுப்பேற்றபோது மாநில அரசின் மொத்த கடன் ரூ.5.15 லட்சம் கோடியாக இருந்தது. நிதிப் பற்றாக்குறையை குறைக்கவும், கடன் சுமையை கணிசமாக குறைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால், கள நிலவரம் வேறாக உள்ளது என்பதே உண்மை. காரணம், கடந்த ஆண்டு சட்டசபையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், 2024-25 நிதியாண்டின் முடிவில் மாநில அரசின் நிகர கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும்,  நடப்பு நிதியாண்டில் 1.55 லட்சம் கோடி கடனாக வாங்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இதன் மூலம், திமுக அரசு பொறுப்பேற்றபோது ரூ.5.15 கோடியாக இருந்த கடன் சுமை, கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.6.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.


கடன் தொகை எப்படி செலவாகிறது?


இந்நிலையில் தான் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் தமிழ்நாடு அரசு  ரூ.50 ஆயிரம் கோடியை கடனாக வாங்கியிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடன் தொகையில் ரூ.15,375 கோடி கடந்த ஆண்டுகளில் வாங்கிய கடன்களை அடைப்பதற்காக திருப்பி செலுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள தொகை வருவாய் செலவினங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடப்பாண்டில் மேலும் ரூ.34,268 கோடி  கடனை திரும்ப செலுத்த வேண்டியிருப்பதாலும், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை கணிசமாக அதிகரித்து விட்டதாலும் வரும் மார்ச் மாதத்திற்குள்ளாக மேலும் ரூ. 1.05 லட்சம் கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.


2024-25 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.2,99.010 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, முதல் 6 மாதங்களில் சராசரியாக ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், முதல் 6 மாதங்களில் வெறும் ரூ.1,23,970 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.28,717 கோடியாக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் நடப்பாண்டில் வாங்கப்பட வேண்டிய கடனின் அளவு ரூ.1.55 லட்சம் கோடி என்ற அளவையும் தாண்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது” எனவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.


தனிநபர் மீதான கடன்சுமை எவ்வளவு?


அதோடு, ”2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த  திமுக இதுவரை மொத்தம் ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதுவரை வாங்கிக் குவித்துள்ள கடனுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.63,722 கோடி வட்டி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் ரூ.175 கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது.  தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.20 லட்சம் கடனாக வாங்கப்பட்டுள்ளது.


மக்கள் நலன் காக்கும் அரசின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. ஆனால், அதை சமாளிக்கும் அளவுக்கு மக்களை பாதிக்காத வகையில்  அரசின் வருவாயும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், தொலைநோக்கு பார்வையில்லாத திமுக அரசுக்கு மதுவின் விலையை உயர்த்துவது, விற்பனையை அதிகரிப்பது ஆகிய இரண்டைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நிர்வாகத் திறனற்ற திமுக அரசு மீதமுள்ள காலத்தில் இன்னும் எத்தனை  லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறதோ தெரியவில்லை?  கொள்ளையடிப்பதற்கு வசதியாக மின்சாரக் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி,  தொழில்வரி, வாகன வரி உள்ளிட்ட அனைத்தையும் உயர்த்திய திமுக அரசு, அரசின் வருவாயைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.