திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வந்த ஆதவ் அர்ஜூனாவிடம் இனி கூட்டணி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

என்ன நடந்தது ? பின்னணி என்ன ?

விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லையென்றால், திமுக-வால் வட மாவட்டங்களில் வெற்றி பெற்றிருக்க முடியாது, ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு உள்ளது? என பல்வேறு கருத்துகளை சமீப காலமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜூனா கூறிவந்தார். அவரது இந்த கருத்துகள் திமுகவிற்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அறிவாலயத்திற்கே சென்ற அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விளக்கம் அளித்து வந்தார்.

Continues below advertisement

அதன்பிறகும், ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படாததால், திமுகவுடனான விசிகவின் கூட்டணியில் விரிசல் விட்டுவிடுமோ என்ற அச்சம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளுக்கு வந்தது. அதனால், அவர்களும் திருமாவளவை சந்தித்து இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் பேசுவதை ஆதவ் அர்ஜூனா நிறுத்த வேண்டும் என்று கூறி வந்தனர்.

திருமாவுக்கு அடுத்து நான் – தான் – தனி ரூட்டில் ஆதவ்

இந்நிலையில், விசிக-வில் திருமாவளவனுக்கு அடுத்த நிலையை எட்டிப் பிடிப்பதற்காக தனி ரூட் எடுத்து ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருவதும், கட்சியின் மூத்த பொறுப்பாளர்களை அவர் நடத்தும் விதமும் நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. அதோடு, அவரது செயல்பாடுகள் கட்சியை வளர்க்கும் விதமாக இல்லையென்றும் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முன்னிறுத்திக்கொள்ளும் வகையிலேயே இருப்பதாகவும் நிர்வாகிகள் கருதிவந்தனர்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக-வை பிரிக்கத் திட்டமா ?

அதோடு, அதிமுக நிர்வாகிகள் பலருடன் ஆதவ் அர்ஜுனா நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக-வை திமுக கூட்டணியில் இருந்து பிரித்து, அதிமுக கூட்டணியில் சேர்க்க, அவர் தன்னுடைய தேர்தல் வியூக வகுப்பு நிறுவன ஆட்கள் மூலம் பணி செய்து வருவதாகவும் கிடைத்த தகவலால் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருமாவிடம் சென்று முறையிட்ட தலைவர்கள்

ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள், அவரது நிறுவனம் மூலம் செய்யும் வேலைகள் உள்ளிட்ட ஆதாரங்களை திரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் திருமாவிடம் சமர்பித்து, ஆதவ் அர்ஜூனா குறித்து விளக்கியுள்ளதாகவும் இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட அவர் ஆதவ் அர்ஜூனாவை அழைத்து பேசியதாகவும் விசிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கட்டளையிட்டாரா திருமா ? கலக்கத்தில் ஆதவ் ?

மேலும் தேர்தல் நெருங்கும் வரை திமுக கூட்டணி குறித்தோ, ஆட்சி, அதிகார பங்கு பற்றியோ எதுவும் பொதுவெளியிலோ, சமூக வலைதளங்களிலோ பேசவும், பதிவிடவும் வேண்டாம் என ஆதவ் அர்ஜூனாவிற்கு திருமாவளவன் கட்டளையிட்டுள்ளதாகவும் அதன் காரணமாகவே ஆதவ் அர்ஜூனா சில நாட்ளாக அமைதியாக இருப்பதாகவும்  தகவல் கசிந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.