நேற்று சென்னை கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்குதலுக்கு உள்ளான நிலையில், தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தை அறிவித்தனர், தமிழ்நாட்டில் மருத்துவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சியினர் ஒன்று கூடி பேசத் தொடங்கினர், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதை அரசு மறைக்க நினைக்கிறது என பல்வேறு மருத்துவர்களும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு அரசை விமர்சித்து வருகின்றனர்.


மருத்துவம் படித்தவரை மருத்துவரை துறை அமைச்சர் ஆக்குங்கள் – எழும் கோரிக்கை


இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு அமைச்சராக இருக்கும் மா.சுப்பிரமணியனுக்கு பதில், மருத்துவம் குறித்து அறிந்த, வேறு ஒரு நபரை இந்த துறைக்கு அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, மருத்துவ துறையின் செயல்பாடுகள் பல்வேறு கட்டங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு அவ்வப்போது விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசும் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தள்ளப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் டாக்டர் விஜயபாஸ்கரே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அதே போன்று, மருத்துவம் படித்த ஒருவரை தமிழகத்தின் மருத்துவத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்ற கருத்து தற்போது பரவலாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


வரிசைக்கட்டிய சர்ச்சைகள்


இப்படியான கருத்துகள் வருவதற்கு காரணம், மருத்துவ துறையில் தொடர்ந்து வரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ் – சைனி என்ற தம்பதியின் 3 வயது ஆண் குழந்தையை காய்ச்சல் காரணமாக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தப்போது, நோயின் தன்மையை பரிசோதிக்காமல் அந்த குழந்தைக்கு வெறிநாய் கடிக்கான மருத்து தரப்பட்டதால் அந்த குழந்தையின் உடல்நிலை மோசமாகிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. மேலும், சென்னையில் தசைப்பிடிப்புக்காக மருத்துவமனைக்கு சென்ற விளையாட்டு மாணவி ஒருவருக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட சம்பவம், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கவனக்குறைவாக அளிக்கப்பட்ட சிகிச்சையால், அந்த குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் என அடுக்கக்கடுக்காக மருத்துவ துறை மீது தொடர் சர்ச்சைகளும் விமர்சனங்களும் வரிசைக்கட்டி எழுந்து வருகின்றன. அதனை பயன்படுத்தி எதிர்க்கட்சிளும் திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.


போதிய மருத்துவர்கள் இல்லையா ?


அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை, அதனால், பணியில் இருக்கும் மருத்துவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டியிருகிறது, இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர் என பல மருத்துவர்களே நேரடியாக சமூக வலைதளங்களில்பதிவு செய்து வருகின்றனர். இப்படியான சூழலில் அரசு மருத்துவமனைக்குள்ளேயே மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.


இப்படியான சூழலில், மருத்துவத் துறையின் கள நிலவரம் தற்போதைய அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தெரியவில்லை என்றும் தற்போது அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் நிர்வாகத்தில் திறமையாக செயல்படும் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவம் அல்லாத வேறு துறை கொடுத்து, அவரை நிர்வகிக்க சொல்லலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.






எழிலனை மருத்துவத் துறை அமைச்சர் ஆக்குங்கள்


இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவம் படித்த சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சராக இருந்ததுபோல், தற்போது ஆயிரம்விளக்கு திமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் டாக்டர் எழிலனை, மா.சுப்பிரமணியனுக்கு பதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


எதையும் புள்ளிவிவரங்களோடு பேசக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கும் அவரை மருத்துவத் துறைக்கு அமைச்சர் ஆக்கினால், அரசுக்கு எழும் நெருக்கடிகள் குறையும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.


சிக்கல் என்ன ?


ஏற்கனவே, சென்னையை சேர்ந்த சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கூட சென்னை தொகுதிகளிலேயே வெற்றி பெற்றுள்ளனர். சென்னையை அடுத்த ஆவடியை சேர்ந்த நாசருக்கும் தற்போது மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ எழிலனை அமைச்சர் ஆக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சமூக சமத்துவத்தில் உறுதியாக இருக்கும் திமுக, அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும், மாவட்டங்களும் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. இதனாலேயே சென்னையை சேர்ந்த மருத்துவர் எழிலனை அமைச்சர் ஆக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.


ஆனால், தமிழக மக்களின் நலனில் மிக முக்கிய அக்கறைக்கொண்ட துறையான மருத்துவத் துறைக்கு அந்த துறை குறித்து நன்கு அறிந்த ஒருவரை அமைச்சராக நியமனம் செய்தால்தான் களநிலவரத்தையும் மருத்துவர்களின் பிரச்னைகளையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, முடிவுகளை எடுத்து, சர்ச்சைகள் வராமல் சமாளிக்க முடியும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.


எழிலனின் மன நிலை என்ன ?


இது குறித்து மருத்துவரும் எம்.எல்.ஏவுமான எழிலனின் ஆதரவாளர்களிடம் கேட்டப்போது :  ‘அவருக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ இல்லை என்றும், திமுக தலைமை சொல்லும் அறிவுறுத்தல்களை பின்பற்றி, தொகுதியை சிறப்பாக வைத்துக்கொள்வதும் அடுத்தக் கட்டத்திற்கு கட்சியை எடுத்துச் செல்வதும், இளைஞர்களுக்கு திராவிட மாடல், சமூக சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக செயல்படுவதுமே அவரது முக்கிய பணியாக கருதி, அதனை செய்து வருகிறார்’ என குறிப்பிடுகின்றனர்.