30 ஆண்டுகளுக்கு மேலாக...

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதான கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக இருந்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே நேரடியாக, தேர்தலில் போட்டிகள் நடைபெற்றாலும், அதற்கு அடுத்த இடங்களில் இருக்கும் கட்சிகளின் வாக்குகள் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக, அரசியல் இயக்கமாக செயல்பட்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழ்நாடு தேர்தல் அரசியலில், முக்கிய இடம் வகித்து வருகிறது. பல சமயங்களில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பாமக , இருந்துள்ளது.

 



வன்னியர் சங்க மாநாடுகள்

 

 

வன்னியர் சங்கத்தை அடிப்படையாக வைத்து துவங்கப்பட்ட கட்சியான பாமக தனது கட்சி தொண்டர்களை, தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை,  "சித்திரை முழு நிலவு நாளன்று" வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது. முதலில் பூம்புகார் பகுதியில் வன்னியர் சங்க மாநாடு நடத்தி வந்த பாமக, பிறகு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க மாநாடுகளை நடத்தி வந்தது

 

கலவரத்தில் முடிந்த மாமல்லபுரம் மாநாடு

 

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, கடைசியாக வன்னியர் சங்க இளைஞர் மாநாடு சித்திர பௌர்ணமி அன்று நடைபெற்றது. அப்பொழுது மரக்காணம் பகுதியில், வன்னியர் சங்க மாநாட்டுக்கு கலந்து கொள்ள வந்தவர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு இடையே மோதல் வெடித்து அது கலவரமாக மாறியது. அந்த கலவரத்தில் பாமகவை சார்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக அந்த சமயத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் கடந்த 2013-ல் விழா நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்தது. 2014-ல் தேர்தல் நடத்தை விதிகளை சாதக மாக பயன்படுத்திக் கொண்ட மாவட்ட காவல்துறை, அப்போதும் விழா நடத்த அனுமதி அளிக்க வில்லை. இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாட்டை கைவிட்டது.



"மாற்றத்தை நோக்கி பயணித்த பாமக"

 

 

இதற்கு மாறாக , தமிழகம் முழுவதும் பல்வேறு காலகட்டத்தில் மண்டல மாநாடுகள் உள்ளிட்டவத்தை நடத்தி வந்தது. 2016 இல் பாமக நடத்திய வண்டலூர் அரசியல் மாநாட்டில், பல வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டு வந்திருந்தது. 2016ல் அந்த மாநாடு தமிழக மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்திருந்தது, இருந்தும் அந்தத் தேர்தலில் பாமகவிற்கு தோல்விதான் கிடைத்தது. கடைசியாக 2017 இல் விழுப்புரம் பகுதியில், செப்டம்பர் மாதம் ' சமூக நீதி மாநாட்டை' பாமக நடத்தி இருந்தது. இதன்பிறகு, பாமக சார்பில் பெரிய அளவில் எந்தவித மாநாடுகளும் நடைபெறவில்லை . 

 

புதிய தலைவர் அன்புமணி

 

இது ஒருபுறம் இருக்க, தொடர் தோல்விகளை பாமக சந்தித்து வருகிறது. 2019 ,2021 ஆகிய தேர்தலில் பாமக அங்கம் வகித்த, அதிமுக கூட்டணி தோல்வியை சந்தித்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வடமாவட்ட பகுதிகளில் கணிசமான இடங்களை வென்று இருந்தாலும், நகர்ப்புற தேர்தலில் பாமக பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அடுத்து அன்புமணி தமிழக முழுவதும், பயணங்களை மேற்கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். 

 



பாமக  2.0

 

மீண்டும் பாமகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதற்காக, பாமக 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும், இதன் மூலம் 2026 இல் பாமக  கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக திட்டம் தீட்டி வருவதாகவும் அன்புமணி கூறி வருகிறார். பாமக தொண்டர்கள் வன்னியர் சங்க மாநாட்டை நடத்த வேண்டும் என தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

 

 

மீண்டும் வன்னியர் சங்க மாநாடு

 

 பாமக தலைவராக உள்ள அன்புமணி ராமதாஸ் இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு திருநாள் நடத்த திட்டமிட்டு அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு கண்டிப்பாக சித்திரை திருநாள் விழா கொண்டாடப்படும் என பாமக தரப்பில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு இடங்களை பாமகவின் முக்கிய நிர்வாகிகள், யாருக்கும் தெரியாமல் சென்று ஆய்வு செய்து விட்டு வந்துள்ளனர்.

 



விரைவில் அறிவிப்பு வரலாம்

 

அதை உறுதிப்படுத்தும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அண்புமணி ராமதாஸ் அந்த இடத்தை இன்று பார்வையிட்டார். அன்புமணியின் வருகை காஞ்சிபரம் மாவட்டத்தில் உள்ள பாமக மிக முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு சென்ற புகைப்படங்கள் தற்பொழுது வெளியே கசிந்துள்ளன.

 

இதுவரை இதற்கான பாமக சார்பில், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த முறை நிச்சயமாக சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறும் என முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். சித்திரை முழு நிலவு விழாவானது மே 05 தேதி வந்தாலும், மே 06 -ஆம் தேதி தான் மாநாடு நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாமகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, இந்த மாநாடு நிச்சயம் உதவி செய்யும் என நம்புகின்றனர் பாமகவினர்.