மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

"ஊழல், குடும்ப கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது, நிலையான, வலிமையான அரசாக இருக்கவே முடியாது"

Continues below advertisement

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 1984-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைத்ததில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2014 -ல் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைத்தது. 2019-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு முன்பை விட அதிக இடங்களுடன் தனிப்பெரும்பான்மை கிடைத்தது.

Continues below advertisement

140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், தொடர்ந்து 10 ஆண்டுகள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வது என்பது மகத்தான சாதனை. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மூன்று முறை,  மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை என தொடர்ந்து ஐந்து முறை நரேந்திர மோடி தலைமையில் தனி பெரும்பான்மையின் பாஜக வெற்றி ஆட்சி அமைத்திருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இது பெரும் சாதனை.

பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்

10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, 96 கோடிக்கு அதிகமான மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக  370-க்கும் அதிகமான  இடங்களில் வென்று நரேந்திர மோடியே பிரதமர் ஆவார் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும்  கூறுகின்றன. இது மோடியின் ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் வென்றது. அதனால் எந்தப் பலனும் இல்லை. மீண்டும் மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. இதனால், திமுக கூட்டணிக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்கள் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பதே தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் நன்மை பயக்கும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வலிமையான, நிலையான, வெளிப்படையான, ஊழலற்ற, திறமையான அரசு இருந்ததால்தான் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. நம்மை மிரட்டி கொண்டிருந்த நாடுகள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை மதித்துப் போற்றுகின்றன. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு தொடர மீண்டும் பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஊழல், குடும்ப கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள 'இண்டி' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது, நிலையான, வலிமையான அரசாக இருக்கவே முடியாது. 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல் போல ஊழல்கள் தான் நடந்து கொண்டிருக்கும். இந்தியாவில் குடும்ப ஆட்சி மேலும் வலுப்படும். இந்த அவலம் நடக்காமல் இருக்க மீண்டும் பாஜகவுகே மக்கள் வாக்களிக்க வேண்டும். 'இண்டி' கூட்டணியில் உள்ள திமுக போன்ற கட்சிகள், இந்தியாவை ஒரு நாடாகவே ஏற்க மறுப்பவை. தேசியத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவை. பிரிவினை சிந்தனையை விதைப்பவை. எனவே, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து நேரும். இந்தியா ஒரே நாடாக, வலிமையான நாடாக இருக்க மீண்டும் பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

வளர்ச்சி தொடர வேண்டும்

இந்தியா சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு, 1998-ல் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் தான், இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடங்கப்பட்டன. 'தங்க நாற்கரச் சாலைகள்' திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், நகரங்கள் முதல் முறையாக இணைக்கப்பட்டன. இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அன்றைய வாஜ்பாய் அரசு. அதன் தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளில், நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கச் சாலைகள்,  புதிய ரயில் பாதைகள், முதல் முறையாக சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள், தேஜஸ், வந்தே பாரத் என்று அதிவிரைவு ரயில்கள், 75 புதிய விமான நிலையங்கள், துறைமுகம் மேம்பாடு, புதிய மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என்று உள்கட்டமைப்பில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சி உலகை மிரளச் செய்துள்ளது. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதாரக நாடாகி இருப்பதற்கும், அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர இருப்பதற்கும் இந்த உள்கட்டமைப்பு வசதிகளே காரணம்.  இந்த வளர்ச்சி தொடர மீண்டும் பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில்தான், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, கழிவறை மின்சார இணைப்பு, சமையல் என்று அடிப்படை வசதிகள் சாத்தியமாகி இருக்கிறது. இந்த வளர்ச்சி தொடர மீண்டும்  பாஜகவுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் மட்டுமல்ல, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளிலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அரங்குகளிலும் தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் சிறப்புகள் பற்றி தொடர்ந்து பேசிய ஒரே பிரதமர் மோடி மட்டுமே. தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று பிரகடனப்படுத்திய பிரதமரும் மோடி மட்டுமே. ஒட்டுமொத்த நாட்டிற்குமான பாஜக தேர்தல் அறிக்கையில், உலகின் தொன்மையான மொழியான தமிழை உலகெங்கும் கொண்டுச் செல்வோம், உலகெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு தேசிய கட்சியின் தேர்தல் அறிக்கையில் நம் அன்னைத் தமிழுக்கு மகுடம் சூட்டப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. எனவே மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

உண்மையான மாநில உரிமை

1977-ல் வாஜ்பாய் அத்வானி ஆகியோர் இடம் பெற்றிருந்த ஜனதா கட்சி ஆட்சியில்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க, மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1989-ல் பாஜக ஆதரவுடன் இருந்த மத்திய அரசுதான் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை மருத்துவம் மேற்படிப்பு உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தி இருக்கிறது மோடி அரசு. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதும் மோடி அரசுதான். இந்த சமூக நீதி அரசு தொடர மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சுதந்திர இந்தியாவில் மோடி ஆட்சியில் தான் முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 12 பேர், பழங்குடியினர் 8 பேர், பிற்படுத்தப்பட்டோர் 27 பேர் பெண்கள் 11 பேர் இடம்பெற்றுள்ளனர். சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது தான் உண்மையான சமூக நீதி. அதை நிலைநாட்டி இருக்கிறது மோடி அரசு. எனவே மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. ஆனால், மோடி ஆட்சியில் நீட் உள்ளிட்ட தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான மாநில உரிமை. எனவே மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola