பொது வாழ்வில் ஆத்திச்சூடியைக்கூட அறியாத விஜய் ஆட்சிக்கு வந்ததைப்போலவேகனவுலகத்திலும் எப்படி திளைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவெக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார்.
முதல்வரை தாக்கி பேசிய விஜய்:
தமிழ் வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு கூட்டமானது சென்னையை அடுத்த மாமல்லப்புரத்தில் நேற்று நடந்தது. இதில் தவெக தலைவர் விஜய், அரசையும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் காட்டமாக பேசியிருந்தார். குறிப்பாக முதல்வரை குறித்து அவர் பேசுகையில் அரசியல் செய்ய விருப்பமில்லை, அரசியல் செய்ய விருப்பமில்லை என அடிக்கடி சொல்லும் முதலமைச்சர், நம்மை குறித்து பல அவதூறுகளைப் பரப்பும் முதலமைச்சர்" என்று சாடினார்.
பெருந்தன்மையை பேரளவில் பேசும் முதல்வர், சட்டமன்றத்தில் நமக்கு எதிராகப் பேசிய எவ்வளவு வன்மத்தைக் கக்கி இருக்கிறார் என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமல் இருக்க மாட்டார்கள்"
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனும், நேர்மை திறனற்று குற்றம் சாட்டிய குறுகிய மனம் கொண்ட முதலமைச்சருக்கு, உச்ச நீதிமன்றத்தின் 13-10-25 விவாதங்கள் மற்றும் உத்தரவுகளை வைத்து சில கேள்விகளை முன்வைத்தார். "பொய் மூட்டைகளையும் அவதூறுகளையும் அழித்துவிட்ட முதல்வருக்கும், திமுக சார்பாகக் கோடிகளைக் கொட்டி அறிவார்ந்த வழக்கறிஞர்கள் கபட நாடக திமுகவின் தில்லு தாங்கிப் பிடிக்க முடியாமல் உச்சநீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வர் அவர்களுக்கு மறந்து விட்டதா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்
வைகோ அறிக்கை:
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய த.வெ.க. தலைவர் விஜய் தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
குற்ற உணர்ச்சி இல்லை:
நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும்.பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும் கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.
நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும்
அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.