விடுதலை புலிகள் குறித்தும், பிரபாகரன் பற்றியும் வெறும் பொய்யை மட்டுமே பேசிவரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விடுதலை புலிகள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Vaiko Vs Seeman


சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட 5 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, சீமானை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.


சீமான் பிரபாகரனை சந்தித்தது இரண்டு நிமிடங்கள் கூட கிடையாது. சீமானோடு புகைப்படம் எடுக்க பிரபாகரன் விரும்பவில்லை. விடுதலை புலிகள் குறித்தும் பிரபாகரன் பற்றியும் சீமான் பேசிவருவது அத்தனையும் பொய் என பேசிய வைகோ, ஆமைக்கறி சாப்பிட்டேன், ஊமைக்கறி சாப்பிட்டேன் என அவர் பேசுவதெல்லாம் சுத்த பொய், அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


விடுதலை புலிகள், பிரபாகரன் பற்றி எல்லா இடங்களிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன் கட்சிக்குள் கொண்டுவரும் சதிவேலையை சீமான் பார்த்துவருகிறார் என்றும், இதனால் விடுதலை புலிகள் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் எனவும் பேசி அவருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.



 


அதோடு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் தனது மகன் துரை வைகோ பணம் வாங்கிவிட்டார் என சீமான், தனது ஆட்களை விடுத்து வீடியோ போட வைத்து புரளி கிளப்பினார். இதுபோன்ற அவதூறுகள் என் மீது பரப்பப்படுவதை தாங்க முடியாத சிவகாசி ரவி தீக்குளித்து இறந்தார் எனவும் உணர்ச்சிவயப்பட்டு அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் வைகோ, என் மனைவியின் அண்ணன் மகன் சரவணன் சுரேஷும் தீக்குளித்து இறந்திருக்கிறார். என் குடும்பமும் உயிரை இழந்திருக்கிறது என பேசி கண்கலங்கினார்.


துரை வையாபுரியை அரசியலுக்கு அழைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான் என் விருப்பம். இருந்தாலும், அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் மதிமுக கூட்டத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் வைகோ தெரிவித்தார்.


மேலும் பல சுவாரஸ்சியமான செய்திகளை படிக்க