சென்னைக்கு ஓடி வந்த விஜய்
சென்னையில் மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் திமுக அரசின் செயல்பாடு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல், திமுக அரசை விமர்சிக்கும் விஜய் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய வைகோ, கரூரில் தவெக கூட்ட நெரிசல் விபத்து நடைபெற்ற நிலையில் திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சென்னை அழைத்து வந்து துக்கம் கேட்டுள்ளார். இது யாரும் செய்யாத பித்தலாட்ட தனம், கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் செய்ய வேண்டாம் என பேசினார். ஆனால் விஜய் கரூர் சம்பவம் தொடர்பாக சகட்டு மேனிக்கு பேசி உள்ளார். காகித கப்பலில் கடல் தாண்ட நினைக்கிறார் விஜய். அரசியலில் ஆத்தி சூடி கூட அறியாதவர் விஜய், அவரது முதலமைச்சர் கனவு பலிக்காது என கடுமையாக வைகோ விமர்சித்தார்.
2011 சட்டமன்ற தேர்தல் கூட்டணி- வைகோ வேதனை
இதனை தொடர்ந்து கூட்டணி தொடர்பாகவும் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது மதிமுக தேர்தலில் போட்டியிடாதது குறித்தும் நடந்தது என்ன என குறிப்பிட்டு பேசிய வைகோ, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது, 12 இடங்கள் தான் கொடுப்போம் என என்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஓ.பன்னீர் செல்வம்,செங்கோட்டையன் ஜெயக்குமார் தெரிவித்தார்கள். ஆனால் இதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து வைகோ கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை என ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி விட்டார்கள்.
நான் அதிமுக கூட்டணிக்கு வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அப்போது எனக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செய்த தவறுக்காக தான் அதன் பலனை தற்போது ஓ.பன்னீர் செல்வம் அனுபவித்து கொண்டு இருக்கிறார். ஆனால் எனக்கு 15 சட்டமன்ற தொகுதியும், ஒரு ராஜ்யா சபா இடமும் வழங்க ஜெயலலிதா தயாராக இருந்தார் என்று பிற்காலத்தில் எனக்கு தகவல்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஜெயலலிதா எனக்கு அருமையான ஒரு கடிதம் எழுதி இருந்தார். பிறகு என்னை நேரடியாகவும் சந்திக்க வந்தார். எம் ஜி ஆர் காக கூட ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை. ஆனால் உங்களுக்காக இறங்கி இருக்கிறார் என என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கூறியாதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
சிலரின் சதி செயல்களால் வரவேண்டிய கூட்டணி வராமல் போய்விட்டது. இன்று வரை திமுக பற்றி ஒரு சொல் கூட விமர்சனம் செய்யாத கூட்டணி கட்சி என்றால் அது மதிமுக தான் என வைகோ தெரிவித்தார்.
நடந்தது என்ன.?
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மதிமுக, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்தக் கூட்டணியில் தேமுதிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்து இருந்தது. எனவே மதிமுகவிற்கு 25 முதல் 30 தொகுதிகளை அதிமுக தலைமை ஒதுக்கும் என வைகோ எதிர்பார்த்து காத்திருந்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளின் போது, அதிமுக தலைமை மதிமுகவுக்கு வெறும் 6-7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால் வைகோ கடும் கோவமடைந்தார். இதனையடுத்து கூட்டணியில் இருந்து வெளியேறியவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை மதிமுக முழுமையாக புறக்கணிக்கும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.