நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்தவர் செங்கோட்டையன். இவர் விஜய்யின் கட்சியில் இணைந்ததற்கு தவெக-வினர் வரவேற்பு தெரிவித்தாலும் இவர் மீது பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். செங்கோட்டையன் மீது பலரும் முன்வைக்கும் மிகப்பெரிய விமர்சனமாக இருப்பது வாச்சாத்தி கொடூரமே ஆகும்.
வாச்சாத்தி வன்கொடுமை:
சந்தன கடத்தல் வழக்கின் விசாரணைக்காக 1992ம் ஆண்டு ஜுன் மாதம் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தின் உள்ளே புகுந்த காவல்துறை, வனததுறை, அரசு அதிகாரிகள் கும்பலால் அந்த கிராமத்தில் வசித்த 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிய 1992ம் ஆண்டு அரங்கேறிய இந்த சம்பவத்திற்கு கடந்த 2011ம் ஆண்டுதான் நீதிமன்றத்தில் கிடைத்தது.
இந்த வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம் அரங்கேறியபோது அப்போது தமிழ்நாட்டின் வனத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செங்கோட்டையன். இந்த விவகாரத்தை வெளியுலகிற்கு கொண்டு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டியதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. அப்போது, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாக போராடியதில் முக்கிய பங்கு வகித்தவர் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்.
கதையை முடிக்க உத்தரவிட்ட செங்கோட்டையன்:
இவர் தனியார் வார இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் வாச்சாத்தி வன்கொடுமைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளாரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள பெ.சண்முகம், அவர் சொல்வது பொய். வாச்சாத்தி கொடூரம் நடந்தபோது, அன்றைய வனத்துறை அமைச்சரான செங்கோட்டையன் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்திலே பொய் பேசினார்.
இந்த நிலையில், அதிமுக அரசின் அட்டூழியங்களை நாங்கள்தான் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம். அப்போது அதிகாரிகளைத் தொடர்பு கொணடு அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. விபத்து ஏற்படுத்தி பெ.சண்முகம், அண்ணாமலை ஆகியோரின் கதையை முடித்துவிடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது செங்கோட்டையன்தான். இமயமலையை இலைச் சோற்றில் மறைக்க முடியாது என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
கரும்புள்ளி:
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 215 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அந்த கிராமத்தை சூறையாடி, ஆண்களை அடித்து கொடுமைப்படுத்தியதும் அங்கே அப்போது அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே உள்ளது.
ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற 1991 -96 அதிமுக ஆட்சி காலகட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. அந்த ஆட்சியில்தான் வாச்சாத்தி கொடூரம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.