தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணி, தேர்தல் அறிக்கை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிராச்சாரம் என அடுத்தடுத்து பணிகள் அரசியல் கட்சிகளுக்கு காத்துள்ளது. இதில் முதல் கட்டமாக கூட்டணி தொடர்பாக பேச்சுவாரத்தையானது தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதில் முதல் ஆளாக தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கினர். விரைவில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவோடு ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனு அளிக்க அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
காங்கிரஸ்- விருப்ப மனு அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது. கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை நாளை முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரடியாக வந்து விருப்ப மனு படிவத்தை பெற இயலாதவர்கள் இந்த https://drive.google.com/drive/folders/1G7I1MOz3nNkgXGohJKlneblXZxDBaGVh?usp=sharing லிங்க்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் சட்டமன்ற தொகுதியை குறிப்பிட்டு விருப்ப மனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் இறுதி நாளான 15.12.2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீர் அறிவிப்பிற்கு காரணம் என்ன.?
தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலம் உள்ள நிலையில், விருப்பு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் அளித்துள்ளது. தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் சோர்ந்துள்ளனர். எனவே வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகமாக ஈடுபடவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே விருப்ப மனுவை தாக்கல் செய்ய கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமில்லாமல் எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள். எந்த தொகுதியை அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்த முடிவு காங்கிரஸ் தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.