ஆளுநரின் பட்டம் வாங்க மறுத்து அவரைப் புறக்கணித்த மாணவி விவகாரத்தில், கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக துணை செயலாளரின் மனைவி

மாணவி ஜீன் ராஜன் பேட்டி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் இருந்து பட்டம் பெற விரும்பவில்லை; நான் திராவிட மாடலைப் பின்பற்றுகிறேன். எனது கணவர் நாகர்கோவில் மாநகர திமுக துணை செயலாளராக இருக்கிறார்'' என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இதை அண்ணாமலை கடுமையாக சாடி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

''நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி, ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களா?

காலம் காலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலின், தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்?'' என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.