சேலம் மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அரசியல் கட்சி நிர்வாகிகள் போட்டா போட்டியில் ஈடுபட்ட நிலையில் கடைசியாக சண்டை போட்டவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் 11 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை மற்றும் ஆண், பெண் வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை வாசிக்க தொடங்கியதுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் மாஸ் கணேஷ் நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு மற்ற அரசியல் கட்சியினர் முதலில் வாக்காளர் பட்டியல் வெளியிடட்டும் பிறகு உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் என்ற கருத்தை எடுத்துரைத்தனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விளம்பரத்திற்காக நான் பேசவில்லை என்னுடைய உரிமையை நிலைநாட்டும் வகையில் இங்கு கேள்வி கேட்பதாகவும் கணேசன் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் வாக்காளர் பட்டியலை வெளியிட ஆரம்பித்தவுடன் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி எதிர்க்கட்சியினர் முண்டியடித்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தனர்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சேலம் மாவட்ட தலைவர் கணேசன் நான் விளம்பரத்திற்காக வரவில்லை என்றும் விளம்பரத்திற்காக வந்தவர்களை மட்டும் அழைத்து போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேசியதால் மாநகர ஆணையாளர் அவரையும் அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தார். அப்போது முன்னணி கட்சியான திமுக மற்றும் அதிமுகவினர் அவருக்கு முதன்மையான இடத்தில் அவரை நிற்கவைத்து போட்டோக்கு போஸ் கொடுக்க செய்தனர். இதனையடுத்து எந்த வித சலனமும் இல்லாமல் அவர் கிளம்பிச் சென்றார்.
பத்திரிகையாளர்கள் மற்றும் கேமராக்கள் முன்பு தாங்கள் ஒரு அரசியல் கட்சி மற்றும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேச வேண்டும் என்பதற்காக இதுபோன்று பேசுபவர்கள் தங்கள் கொள்கையில் உறுதி இல்லாமல் எதைப்பற்றி பேசினாரோ கடைசியில் அந்த விளம்பரத்திற்காகவே போஸ் கொடுத்து விட்டு சென்றது "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்ற கவுண்டமணி காமெடி போல போல் இருந்தது என்றால் அது மிகையல்ல.