தமிழக முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., பொதுக்குழுவில் பேசியதற்கு எதிராக பல விஷயங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதுரையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
”ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க., அடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால்தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார். நான் ஏற்கனவே சொன்னதுதான், மீண்டும் உறுதியுடன் சொல்கிறேன், எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே ‘out of control’-தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்”. - என கடந்த 1-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பேசினார். இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் பா.ஜ.க., தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். இது தமிழக அரசியலில் விறுவிறுப்பை கிளப்பியுள்ளது.
 

மதுரைக்கு வருகைதரும் மத்திய உள்துறை அமைச்சர்

கோயில் நகரம் மதுரையில் தி.மு.க., சார்பாக நடத்திய பிரமாண்ட பொதுக்குழு கூட்டம் கவனம் பெற்றது. வழக்கம் போல பிரமாண்டத்தை காண்பித்தார் அமைச்சர் பி.மூர்த்தி. பொதுக்குழு நிகழ்ச்சி அரங்கை கண்டு தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பொங்க பேசினார். அதே நேரம் பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க.,விற்கு சவால்விடும் வகையில் பேசினார். முன்னதாக கிட்டதட்ட 23 தீர்மானங்களை நிறைவேற்றினர். தி.மு.க., தேர்தலை நோக்கி கடுமையாக பயணிக்க உள்ளது, என்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் கொதிப்பில் இருந்த பா.ஜ.க., நிர்வாகிகள் கோவை செல்ல பிளான் செய்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணத்தை மதுரைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்து திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க., பொதுக்குழு நடைபெற்ற இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில். அதாவது, ஒத்தக்கடை அருகே தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான மைதானத்தில் பா.ஜ.க., முக்கியத்தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தல் பணியில் தமிழக அரசியல் கட்சிகள்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு 12 மாதங்கள் கூட இல்லாத சூழலில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரைக்கு வரும் 8-ம் தேதி வருகை தருகிறார். அன்று மாலை 4-மணிக்கு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஏற்கனவே ராமேஸ்வரம் பகுதிக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தி.மு.க., குடும்ப அரசியல் குறித்து கடுமையாக பேசினார். இந்த சூழலில் தமிழக முதல்வர் தி.மு.க., பொதுக்குழுவில் பேசியதற்கு எதிராக பல விஷயங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.