மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `வரலாற்றை அரசாங்கத்தால் உருவாக்க முடியாது’ எனக் கூறியுள்ளார். மேலும், மக்கள் சமூகமாக உண்மையான வரலாற்றைக் கூற முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தின் அஹோம் அரசர்கள், சிவாஜி தலைமையிலான மராட்டியர்கள் முதலானோரால் தற்போதைய இந்தியா உருவாகியுள்ளதைப் போல படையெடுப்பாளர்களுக்கு எதிராக இந்திய அரசர்களின் போர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


`சிலர் நம் வரலாற்றை மாற்றியுள்ளார்கள் என்பது உண்மை. அவர்களுக்குத் தேவைப்படும் வகையில் எழுதியுள்ளார்கள்.. தற்போது நம்மை யாரால் தடுக்க முடியும்? யாராலும் முடியாது.. வரலாற்றை அரசாங்கம் உருவாக்காது.. அது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாகிறது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில், வலதுசாரி எழுத்தாளர் ஓமேந்திரா ரத்னு எழுதிய `Maharanas: A Thousand Year War for Dharma' என்ற புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 



அடுத்த தலைமுறைகளுக்காக இந்தப் போர்கள் பற்றிய வரலாற்றை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறியுள்ள அமித் ஷா, புதிய வரலாற்று புத்தகங்கள் பெரியதாகவும், பொய் கூறுவோருக்கு எதிராகவும் தகவல்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். 


பல்வேறு எழுத்தாளர்களும், ஜனநாயக அமைப்புகளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் வரலாற்றை இந்துமயமாக்குவதாக குற்றம் சாட்டிவரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரைப்பட இயக்குநர்களையும், எழுத்தாளர்களையும் `உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் பக்சி ஜெகபந்து பற்றிய தொலைக்காட்சி தொடரான `வித்ரோஹி’ திரையிடப்பட்ட நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். மேலும், கடந்த மாதம், நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் ராஜ்புத் மன்னர் ப்ருத்விராஜ் சௌஹான் பற்றிய `சாம்ராட் ப்ருத்விராஜ்’ திரைப்படத் திரையிடலிலும் அவர் கலந்துகொண்டார். கொண்டாடப்படாத இத்தகைய நாயகர்களின் கதைகள் திரைப்படங்களாகவும், தொடர்களாகவும் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 



`நாம் வரலாற்றை ஆய்வு செய்து, அவற்றை எழுத தொடங்கினால், அது விவாதத்தை உருவாக்கி, தற்போதைய தலைமுறையினரிடையே உரையாடலை உருவாக்கும். ஆனால் இது ஒரு நீண்ட பயணம்.. பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.. நாம் அவற்றை மீட்டு, மக்களை எழுச்சி கொள்வதற்காக வெளிக்கொண்டு வர வேண்டும்’ எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 


அரசு `உண்மையான வரலாற்றை’ ஆவணப்படுத்த தொடங்கியுள்ள போதும், சமூகமே அதனை முன்னெடுக்கும் போது தான் அது வெற்றியடையும் எனக் கூறியுள்ள அமித் ஷா, `வீர சாவர்க்கர் இல்லையென்றால், 1857ஆம் ஆண்டின் விடுதலைப் போரின் உண்மை வெளி வந்திருக்காது’ எனவும் கூறியுள்ளார்.