உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "பிற்காலத்தில் நாம் என்ன ஆகப்போகிறோம் என்பதை மிக, மிக சிறிய வயதிலே தீர்மானித்து, அதில் இருந்து இம்மியளவும் விலகாமல் பயணித்தால் அந்த இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்பதற்கான அடையாளம்தான் நான். அந்த அடையாளத்தின் தொகுப்புதான் இந்த புத்தகம்.


அந்த இலக்கை அடைய நான் எந்த சாகசமும் செய்யவில்லை. அதை செய்ய வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. நான் எனது இயல்பில் இருந்தேன். என்னுடைய இயல்பே என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. கலைஞர் ஒருமுறை நான் பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன்தான் ஸ்டாலின். அது அவனது இயல்பிலே தெரிகிறது என்றார். அந்த பக்குவம் எனக்கு சிறு வயதிலே இருந்தது என்பதை இந்த புத்தகம் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.


பிறக்கும்போது ஒரு தலைவருக்கு மகனாக பிறந்ததும் அதற்கு காரணமாக இருக்கலாம். சின்ன வயதில் நான் பார்த்த அரசியல் நெருக்கடிகள், கைதுகள், போராட்டங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். இளைஞனின் வாழ்க்கையில் பார்க்காத, கேட்காத, கேள்விப்படாத காட்சிகள் எல்லாம் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. அதுவும் காரணமாக இருக்கலாம். கருணாநிதி திருச்சி சிறையில் இருந்தபோது, என்னை கைக்குழந்தையாக எனது தாயார் தயாளு அம்மாள் திருச்சி சிறையில் தூக்கிச்சென்று காட்டினார்.




கல்லூரி படிக்கும் காலத்தில்தான் நான் மிசாவில் கைதானேன். கோபாலபுரம் வீடு சிறையாக இருந்தது. அதுதான் என்னை செதுக்கியது. கோபாலபுரம் வீடு என்பது தமிழ்நாட்டின் நிரந்தர அரசசபை. திராவிட இயக்கத்தின் திருச்சபை. எங்களது உயிர்ச்சபை. அந்த உயிர்ச்சபைதான் என்னை உருவாக்கியது, அந்தவீடு என்னை வளர்த்தது, ஆளாக்கியது, பண்படுத்தியது. இந்த புத்தகம் அந்த வீட்டின் வரலாறு. மொழிக்காப்பதற்காக உயிரையே தரத் தயார் என்று முழங்கிய வரலாறு. 23 வயதில் துர்காவை கைப்பிடித்த வரலாறு. திரையுலகில் கால்பதித்த வரலாறு. இப்படி எல்லா திருப்பங்களையும் 23 வயதிற்குள் பார்த்தவன்தான் நான்.


கலைஞர் உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. அண்ணா அவரது காரை அனுப்பி என்னை அழைத்துவரச் சொன்னார். பள்ளிமாணவனாக அண்ணா பிறந்தநாளை நடத்தியபோது பல நிகழ்ச்சிகளில் துரைமுருகனை பேச்சாளராக பேசவைத்து அழகுபார்த்தவன் நான். அவர் இன்று பொதுச்செயலாளர். நான் இன்று தலைவர்.




1953ல் நான் பிறந்தபோது குலக்கல்வியை எதிர்த்து போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறோம். பள்ளி மாணவனாக இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இன்றைக்கும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கொண்டிருக்கிறோம். 1971ல் மாநில சுயாட்சிக்கும் போராடினோம். இன்றும் மாநில சுயாட்சிக்கு போராடினோம். இந்த புத்தகத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்களின் முகங்கள் உள்ளது. எனக்கு துணையாக வந்தவர்களை குறிப்பிட்டுள்ளேன். கூட்டம் ரொம்ப பெருசு. நான் தனி மனிதன் இல்லை. ஒரு கூட்டம். இது கொள்கைக்கூட்டம். எனது குறிக்கோள் பதவி, பொறுப்பு அல்ல, கொள்கை. எனது தத்துவத்திற்கு திராவிட மாடல் என்பதே பெயர். திராவிடவியல் ஆட்சி முறை என்பதே எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி முறைதான் எனது குறிக்கோள்.  எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியலின் கோட்பாடு.


ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வால் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது என்று கூறினார். அது அவர் திராவிடயவில் கோட்பாட்டை முழுமையாக உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. கூட்டாட்சி தத்துவம் குறித்து ராகுல்காந்தி அதிகம் பேசுகிறார். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா முழுமையாக உள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பது இந்தியா முழுவதும் இன்று முழக்கமாக மாறிவிட்டது. எனது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக இந்த மேடை அமைந்துவிட்டது."


இவ்வாறு அவர் பேசினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண