தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அமைச்சரும், மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தி.மு.க.வினர் மட்டுமின்றி பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி நான்கு வருடங்களுக்குள் அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்றதற்கு பலரும் வாழ்த்துகள் கூறினாலும், எதிர்க்கட்சிகள் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.
தி.மு.க.வில் பல ஆண்டுகளாக உழைத்து மு.க.ஸ்டாலின் அடைந்த இடத்தை உதயநிதி ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்குள் அடைந்து விட்டார் என்றும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதை விமர்சித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதலமைச்சர் வரை எந்தெந்த வயதில்? பொறுப்பேற்றனர் என்பதை காணலாம்.
மு.க.ஸ்டாலின்:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் தன்னுடைய பதின்ம வயது முதலே இணைந்து செயல்பட்டு வருகிறார். சிறுவயதிலே சிறைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் தன்னுடைய 30வது வயதில் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக 1983ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
30 வயதில் தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் 6 ஆண்டுகளுக்கு பிறகே 1989ம் ஆண்டு முதன்முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு அவர் தேர்வானபோது அவருக்கு வயது 36 ஆகும்.
உள்ளாட்சித்துறை - துணை முதல்வர் - முதலமைச்சர்:
அதன்பின்பு, 2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது, தமிழ்நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் கருணாநிதியால் நியமிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு வயது 53 ஆகும். அந்த ஆட்சியில் ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளுக்கு பிறகே துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2009ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படும்போது அவருக்கு வயது 56 ஆகும். அதன்பின்பு, கடந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட தி.மு.க. அபார வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 2021ம் ஆண்டு தனது 68வது வயதில் பதவியேற்றார்.
உதயநிதி ஸ்டாலின்:
மு.க.ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் ஆற்றிய உழைப்பும், பங்களிப்பும் குறைவு ஆகும். தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தி.மு.க.வின் நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் 2019ம் ஆண்டு தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 40 ஆகும்.
இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவருக்கு 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டியது. தி.மு.க.வின் மூத்த தலைவரான அன்பழகன் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வானார். அப்போது, அவருக்கு வயது வெறும் 42 மட்டுமே ஆகும்.
4 ஆண்டுகளில் துணை முதல்வர்:
எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் தீவிரம் அடைந்த சூழலில், கடந்த 2022ம் ஆண்டு பிற்பாதியில் அவர் தமிழ்நாட்டின் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 43 வயது ஆகும்.
அமைச்சர் பதவி வழங்கி ஓராண்டுகள் நிறைவடைந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று பல அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்த நிலையில், நேற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 45 வயதில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க அவருக்கு 26 ஆண்டுகள் ஆகியது. ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு 4 ஆண்டுகளில் துணை முதலமைச்சர் பதவி கிட்டியுள்ளது. இதன் காரணமாகவே இது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வலுவான போட்டி இருக்கும் என்பதால் அடுத்த தலைமுறைக்கான தி.மு.க.வை உருவாக்கும் நோக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.