சேலம் மாநகர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் பேசியது, ”பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூறி, இந்தியா என்ற பெயரை மட்டும் மாற்றி பாரதம் என்று கொண்டு வந்துள்ளார். திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான். தலைமை சொல்வதை செய்து காட்டுவது தான் செயல்வீரர்கள். எனவே இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத் தருவது உங்கள் கையில் தான் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான மாநாடாக அமைந்திருந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகளும், தலைவர்கள் சிறப்பாக குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.



ஆனால் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக கொள்கைகள் மற்றும் அதன் வரலாறு கூறப்படும். குறிப்பாக திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லியது, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது. அதுகுறித்து விளக்கப்படும். இதுக்கு முன்பாக பாஜக 9 ஆண்டுகள் ஆட்சியில் 2023க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் மீண்டும் தற்பொழுது தேர்தல் வந்துள்ள நிலையில் 2040-குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறுகிறார். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருந்த வரைக்கும் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால் அவர்கள் இறந்த பிறகு பாஜக அடிமைகள் விட்டுக் கொடுத்துவிட்டனர். இதனால் நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளை பெற்று திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதல்வரிடம் கையில் ஒப்படைப்போம். இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவை வீழ்த்த வேண்டும்.



பூட்டு ஒன்றை திறப்பதற்காக அதன் தலையின் மீது மிகப்பெரிய சுத்தி ஒன்றினை கொண்டு மத்திய அரசு ஓங்கி அடிக்கிறார்கள். ஆனால் அதை திறக்க முடியவில்லை. சிறிய சாவி அதை திறந்துவிட்டது. அப்போது நீ மட்டும் எப்படி பூட்டை திறந்தாய் என சுத்தியல் சாவிடம் கேட்டது. அதற்கு சாவி பதிலளித்தபோது, நான் பூட்டின் இதயத்தை தொட்டேன். ஆனால் நீ தலையின் மீது அடித்தாய் என்று சொன்னது. இதன்மூலம் கூறுவது என்னவென்றால், தமிழ்நாட்டு மக்களின் தலையில் மத்திய அரசு ஓங்கி அடித்தாலும், அது பலனளிக்காது. ஆனால் தமிழக மக்கள் சாவியை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள். எனவே அவரால் மட்டுமே மக்களின் மனதை தொடமுடியும். திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சோதனையை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார்கள். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் இளைஞர் அணியினர். எனவே 2021 ஆம் ஆண்டு எப்படி தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டி அடித்தோமோ, அதுபோன்று 2024 ஆம் ஆண்டு அடிமைகளின் எஜமானர்களே வீட்டிற்கு விரட்டி அடிப்போம்" என்று பேசினார்.