தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்தவரை பற்றி கருத்து தெரிவித்த நடிகை குஷ்பூ, “சேரி” என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். அதற்கு இணையத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 


மன்சூர் அலிகான் விவகாரத்தில் குஷ்பூ:


கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து அவருடன் லியோ படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் அநாகரிகமான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் தனது பேச்சில் நடிகை குஷ்பூவையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம், தேசிய மகளிர் ஆணையம் தனது எதிர்ப்பை தெரிவிக்க நேற்று (நவம்பர் 21) மன்சூர் அலிகான் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். 


அப்போது த்ரிஷாவை நான் தப்பாக பேசவில்லை என்றும், நீட் தேர்வை எதிர்த்து அனிதா தற்கொலை செய்துக் கொண்ட போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டபோதும் குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையம் எல்லாம் என்ன செய்யக் கொண்டிருந்தது என சகட்டுமேனிக்கு விமர்சித்து கேள்வி எழுப்பினார். இப்படியான நிலையில் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், தன்னை திமுக ஆதரவாளர் என சொல்லிக் கொள்ளும் இணையவாசி ஒருவர் குஷ்பூவை டேக் செய்து சரமாரியான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 


சேரி மொழியில் பேச முடியாது:


அவர் தனது பதிவில், “மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தப்பட்டபோது தூங்கி கொண்டிருந்த குஷ்பூ மற்றும்  மகளிர் ஆணையம் திரிசாவுக்காக எழுந்து வந்திருக்கிறது இதை வச்சாவது தாமரைக்கு ரெண்டு ஓட்டு தேறுமா என்கிற நப்பாசையில் மற்றபடி மகளிர் நலனெல்லாம் அந்த கட்சியில ஒன்னும் இல்ல” என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு நடிகை குஷ்பூ பதிலளித்திருந்தார். 


அதில், “திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியை பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்க, மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது. உங்களைப் போன்ற முட்டாள்கள் சுற்றி இருப்பது உங்கள் தலைவருக்கு  தான் அவமானம். மு.க.ஸ்டாலின் உங்களை அழிக்க வெளியில் இருக்கும் முட்டாள்கள் கூட்டம் தான் இவர்கள் ஜாக்கிரதை” என தெரிவித்திருந்தார். இதில் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக குஷ்பூவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 


குஷ்பூவிற்கு குவியும் கண்டனம்:


அந்த வகையில் நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள பதிவில், “இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி ரகுராம் சேரி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்து சர்ச்சையில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.