திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 47-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அரசியலுக்கே வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த உதயநிதி, இன்று திமுகவின் எதிர்காலமாகியிருக்கிறார். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தனது தாத்தா, அப்பா பாணியில் திரைத்துறையில் முத்திரை பதித்துவிட்டு இப்போது அரசியலில் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டிருக்கிறார் அவர்.


முதல்வரும் தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து


எத்தனை பேர் வாழ்த்தினாலும் எவ்வளவு பரிசுகள் வந்தாலும் எக்கச்சக்கமாக பாராட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டாலும் அவர் பூரணம் அடைவது என்னவோ தந்தை தாய் வாழ்த்தில்தான். காலையிலேயே தனது தந்தை மு.க.ஸ்டாலினிடமும் தாய் துர்காவிடம் வாழ்த்து பெற்ற பின்னரே மற்றவர்கள் வாழ்த்துகளை ஏற்கத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி.


சட்டமன்ற தேர்தலில் செங்கல், நீட் விலக்கு பிரச்சாரத்திற்கு முட்டை என எதிலும் எளிமையாக எதிரிகளை துவம்ஷம் செய்யும் உதயநிதி தனது பிறந்தநாளிலும் கூட அதை செய்யத் தவறவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தன்னுடைய பிறந்தநாளில் ஆசி வாங்கச் சென்றபோது அவருக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார். அது வெறும் புத்தகம் அல்ல, தமிழக அரசியல் நிலவரத்தை அலசும் அச்சு ஆயுதம்.






அப்படி என்ன புத்தகம் கொடுத்தார் உதய்?


‘ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு ஆளுநர் பதவி எதற்கு?’ என்று கேட்ட அறிஞர் அண்ணா-வின் அடிச்சுவட்டை பின்பற்றி வரும் திமுக, இன்னும் அந்த கொள்கையில் இருந்தும் நிலைப்பாட்டில் இருந்தும் கிஞ்சித்தும் மாறவில்லை. அது மாறாதற்கு ஆளுநர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கிறது.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, ஆளும் அரசாங்கத்திற்கு குடைச்சல் கொடுப்பது என்ற காரணங்களால் தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநர் ஆர்..என்.ரவிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை தமிழ்நாடு அரசு சென்றிருக்கும் நிலையில், இன்று தன்னுடைய பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் போது எழுத்தாளர் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன் எழுதிய ’குடியரசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை வழங்கி மீண்டும் ஒருமுறை ஆளுநர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்திய மாநிலங்களுக்கே தேவையில்லாத ஒரு பதவி என்பதை தன்னுடைய பிறந்தநாள் மூலமும் வெளிப்படுத்தியிருக்கிறார் உதயநிதி.


சிகரம். ச. செந்தில்நாதன்


 அநீதிக்கு எதிராக, சர்வதிகாரத்திற்கு எதிராக எழுதத் தொடங்கிய முற்போக்கு எழுத்தாளராக அறியப்படும் சிகரம் செந்தில்நாதன் பல பக்தி இலங்கியங்களையும் படைத்தவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பகுத்தறிவாளராக கடவுள் மறுப்பாளராக இருக்கும் அதே வேளையில், அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் கோயிலுக்கு செல்வதையும் சாமி கும்படுவதையும் அவர் ஒருபோதும் தடுத்ததில்லை, அவர்கள் உரிமைகளில் விருப்பங்களில் தலையிடுவதில்லை. பகுத்தறியும் பக்தியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பதுபோலதான், எழுத்தாளர் செந்தில்நாதனும் முற்போக்கு கருத்துகளை எழுதியதோடு சைவ சமயம் ஒரு பார்வை, இலங்கை முருகனும் மலேசிய முருகனும், ஆலயமும் ஆகமும் என பல பக்தி இலங்கியங்களை படைத்துள்ளார்.


ஆனால், அவரது படைப்புகள் மூட நம்பிக்கைளையும் பொய் புரட்டுகளையும் உடைத்தெறியும் விதமாகவும் உண்மைகளை மட்டுமே நிறுவும்விதமாகவும் அமைந்துள்ளது.


தேர்ந்தெடுத்த உதயநிதி – மகிழ்ந்த ஸ்டாலின்


வழக்கமாக அரசியல் தலைவர்களை சந்திக்கும்போதோ வாழ்த்து பெற செல்லும்போதோ வெறுங்கையாக செல்லாமல் பூக்கூடை, புத்தகம் என்று ஏதோ ஒன்றை எடுத்து செல்வது வழக்கம். என்ன புத்தகம் கொடுக்கிறோம் என்று கூட தெரியாமல் போகிற போக்கில் கையில் கிடைக்கிற புத்தகத்தை கொண்டு சென்ற கொடுக்கிற பழக்கம் பலருக்கு இருக்கிறது.


ஆனால் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பிறந்தநாளுக்கு முதல்வரிடம் ஆசி பெறும்போது என்ன புத்தகம் கொடுக்கலாம் என்று யோசித்து தன்னுடைய உதவியாளர்கள் கருத்தாளர்களிடம் கேட்டு அவர்கள் பரிந்துரைத்த புத்தகங்களில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ற இந்த ’குடியசுத் தலைவர், ஆளுநர் அதிகாரங்கள் – இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய அவை விவாத’ புத்தகத்தை கொடுத்திருக்கிறார்