பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும், மருதடியில் உள்ள ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கும் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிாியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் இருந்து அருமடல் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடமாக இருந்த சாலையை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையால் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு சாலையை பார்வையிட்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார்.




இதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சிலர் கேட்பது குறித்து கேட்கிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்து கட்சி வெற்றிக்கு பாடுபட்டார். அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த 2 தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அவர் தன்னை நிரூபித்துக் காட்டினார். அவரது சேவை கட்சிக்கும், தமிழகத்திற்கும் அவசியம் தேவை. பெரம்பலூர் முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையை நான்குவழி சாலையாக மாற்றுவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்ததும் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும். தமிழ்நாடு முழுவதும், 69 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த மே மாதம் 12-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பணிகள் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.




அ.தி.மு.க.வில் நடக்கும் போராட்டத்தில் கட்சி காலப்போக்கில் சுக்கு நூறாக உடைந்துவிடும். உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் செல்ல முடியாத இடங்களுக்கு போக கூடிய வாய்ப்பு அவருக்கு மட்டுமே உள்ளது. திரைப்படத்தின் வாயிலாக மக்களிடையே நல்ல வரவேற்பும் அவருக்கு உள்ளது. அவர் கருத்து சொல்லும் போது மக்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக தேர்தல் பணிகள் ஆற்றியதால் உதயநிதி ஸ்டாலின் இயக்கத்திற்கு தேவை. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டு அதிக இடங்களில் வெற்றியை தேடிதந்து அவர் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் சேவை கட்சிக்கும் தமிழகத்துக்கும் அவசியம் தேவை என தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.