Just In





TVK Vijay: சீக்ரெட் ஃபார்முலாவை கையில் எடுத்த விஜய்.. பூத் கமிட்டி மாநாடு எங்க நடக்கப்போகுது தெரியுமா.?
விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து, வட மாவட்டங்களை சார்ந்தே நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆனால், அவர் தனது பார்வையை தெற்கேயும், குறிப்பாக கொங்கு மண்டலம் பக்கமும் திருப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிரமாக அரசியலில் குதித்துள்ள தவெக தலைவர் விஜய், ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து வேலைகளை செய்து வருகிறார். இதுவரை பெரும்பாலும் வட மாவட்டங்களையே குறிவைத்து காய்களை நகர்த்திவந்த அவர், தற்போது தனது பார்வையை தெற்கு பக்கம் திருப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜய்
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில், அதிமுக-வின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கூட, திமுகவால் அங்கு பெரிய அளவில் காலூன்ற முடியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருந்தாலும், கோவையில் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.
அதே நேரம், கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே 2024-ல் அதிக வாக்குகளைப் பெற்றது. இச்சூழலில், விஜயின் தவெக, வட மாவட்டங்களிலேயே தொடர்ந்து கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தென் மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்திலும் விஜய் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தவெகவினரால் குரல் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தவெக-வின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின்போது,”தவெக சார்பில் அனைத்து தேர்தல் பூத்துகளிலும் ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மொத்தம் 67,000 தேர்தல் பூத்துகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் பெரிய பெரிய கட்சிகளுக்குத்தான் பூத் ஏஜென்டுகள் இருப்பார்கள். ஆனால், தவெக சார்பில் அனைத்து பூத்துகளுக்கும் ஏஜென்டுகள் ஸ்ட்ராங்காக நியமிக்கப்படுவார்கள் என்றும், தவெக சார்பில் விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும்” என்றும் விஜய் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகளின் வெற்றியின் சீக்ரெட் என்னவென்றால், அது பூத் கமிட்டிகள் தான். அந்த சீக்ரட் பார்முலாவையே விஜய்யும் கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் நடத்தப்பட உள்ள தவெக பூத் கமிட்டி மாநாடு
இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் நடத்த, கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இந்த பூம் கமிட்டி மாநாட்டை நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வரும் கோவையில், விஜய் இந்த மாநாட்டை நடத்த இடத்தை தேர்வு செய்திருப்பது, கொங்கு மண்டலத்தில் கட்சியை வேகமாக வளர்க்க உதவும் என்றும், திமுக, அதிமுக, பாஜகவிற்கு செக் வைக்கும் முயற்சி இது என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.