தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஏராளமான விஷயங்களைப் பேசினார். அதில் தேர்தல் அரசியல் குறித்து அவர் பேசியதாவது:
’’உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறேன். வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளேன்.
மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர்
மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய், திருமங்கலம் வேட்பாளர் விஜய். உசிலம்பட்டி வேட்பாளர் விஜய்.
அதாவது தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கும் நானே வேட்பாளர். அவ்வாறு நினைத்துதான் மக்களாகிய நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். உங்கள் விஜய்தான் நம் கட்சியின் சின்னம். தவெகவினர் இடையே எந்த அரசியலும் நுழைய முடியாது.
ஒவ்வொரு வீட்டுக்கும் நான் தாய் மாமன்
தமிழ்நாட்டில் வீட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தாய் மாமன் நான். நம் வீட்டு ரேஷன் கார்டுகளில் பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனப்பூர்வமாக இருக்கிறேன்.
சில நடிகர்களைப் போல மார்க்கெட் போன பிறகு, அடைக்கலம் தேடி உங்களை நாடி வரவில்லை. படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் தயாராக வந்திருக்கிறேன்.
நன்றிக் கடனைத் தீர்க்க முடியாது
எவ்வளவு செய்தாலும் எனக்கு நீங்கள் (மக்கள்) செய்ததற்கு நன்றிக் கடனைத் தீர்க்க முடியாது. மக்களுக்கு உழைப்பதே என் வேலை. என் கடன் என் மக்களுக்குப் பணி செய்து கிடைப்பதே!
1967, 1977-ல் நடந்த அரசியல் மாற்றம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடக்கும். இந்தக் கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். இந்தியாவின் வெகுஜன மக்கள் படை இந்தக் கூட்டம். 2026-ல் டிவிகேவுக்கும் டிஎம்கேவுக்கும்தான் போட்டியே.
உங்கள் விஜய், நான் வருகிறேன்
மக்களை மதிக்கிறேன். மக்களை வழிபடுகிறேன். உங்கள் விஜய், நான் வருகிறேன்’’.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.