காவல்துறை தரப்பில் விநாயகர் சதுர்த்தியை காரணம் காட்டி தேதி மாற்ற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. - இதற்கு பொதுச் செயலாளர் ஆனந்த் என்ன சொன்னார் தெரியுமா?

மதுரையில் தவெக மாநில மாநாடு
 
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்தநிலையில் ஜூலை மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றுது. அன்றைய தினமே, மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 
ஒரு லட்சம் நபர்கள் வருகை
 
 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் அளிக்க மீண்டும் இரண்டாவது முறையாக நேற்று வந்தார். 530 ஏக்கர் நிலங்கள் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும் இடமாகவும், பார்க்கி உள்ள நிலம் பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி தவெகவினர் மட்டும் 1 அரை லட்சத்திற்கும் மேல் வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பிட்ட நாள் அன்று நடைபெறும் மாநாடு
 
மேலும் பார்க்கிங் வசதி, மாநாட்டில் பயன்படுத்தப்பட உள்ள தன்னார்வலர்கள் எண்ணிக்கை, நாற்காலிகள் எண்ணிக்கை குறித்து மதுரை எஸ்.பி.அரவிந்திற்கு  தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தகவல் அளித்துள்ளார். மேலும் காவல்துறை தரப்பிலிருந்து மாநாடு நடைபெறும் தேதி தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாடு தேதியை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட நாள் அன்று மாநாடு நடைபெறும் என சொல்லப்பட்டு வருகிறது. 
 
மாநாட்டு தேதியில் மாற்றம் இல்லை பொதுச்செயலாளர் சந்திப்பு
 
இது குறித்து மதுரையின் தவெக முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம்..,” தவெக மாநாட்டுப் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது முறையாக மதுரை எஸ்.பியை., சந்தித்து பேசினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சொல்லப்பட்டது. போலீஸ் தரப்பில் தேதி மாற்றம் குறித்து கேட்டுள்ளார்கள். ஆனால் எங்கள் தரப்பில் இருந்து மாற்றம் எதுவும் சொல்லவில்லை குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறும் என தெரிவித்துள்ளோம். எனினும் போலீஸ் தரப்பில் அடுத்த கட்டமாக எதுவும் தகவல்கள் சொல்லவில்லை. இது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு எதுவும் தகவல்கள் சொல்ல வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்தனர்.