புதுச்சேரி : வாக்கு திருட்டு என்று ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது என்றும்,பீகார் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசுவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோல்வி
புதுச்சேரி பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பிஜேபியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்தாய்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.,
“பிகார் தேர்தல் வெற்றி என்பது இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை மறுபடியும் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மறுபடியும் வரலாறு காணாத வெற்றியை கொடுத்திருப்பது மக்களுக்கு செய்ய வேண்டிய வேலையை செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆட்சிதான் வேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளனர். பீகாரில் ராகுல் யாத்திரை சென்ற அனைத்து பகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 2026-ல் 5 மாநில தேர்தலில் கேரளாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்புள்ளது. அசாமில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க இருக்கிறோம். புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைப்போம்.
ஆட்சிக்கு எதிராக தான் மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் பீகாரில் இந்த ஆட்சி தான் வேண்டும் என்று ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள், வாக்குத் திருட்டு என்று ராகுல் காந்தி யாத்திரை சென்ற இடங்களில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்திருக்கிறார்கள், இதனால் பீகாரில் காங்கிரஸ் கட்சி ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் கட்சியாக மாறி உள்ளது என்று விமர்சனம் செய்தார்.
2026 -ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெறுவோம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள், என்று குறிப்பிட்ட அண்ணாமலை பீகாரில் மாடல் தேர்தல் பணி ஆற்றியது போல் தமிழக மற்றும் புதுச்சேரியில் டீமாக இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். பீகார் வெற்றி என்பது வரலாறு காணாத வெற்றி பீகார் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசுவதாகவும் விமர்சனம் செய்த அண்ணாமலை., பீகார் மாடல் போல் கூட்டணி கட்சிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்காமல் டீமாக பணியாற்றி 2026 -ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெறுவோம் என்றார்.
பிரசாந்த் கிஷோர் நிலைதான் விஜய்க்கு
தவெக தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். பாஜகவை எதிர்ப்பதே விஜய்யின் மனநிலையாக மாறிவிட்டது. எதிர்ப்பு அரசியல் செய்து ராகுல் காந்தி 95 தேர்தலில் தோற்றுள்ளார். இதே நிலைக்கு விஜய்யும் மாறி விட்டார். புதிய கட்சி துவங்கிய பிரசாந்த் கிஷோர் பிகாரில் 3.5% ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். ஆளுங்கட்சி நன்றாக இருக்கும் போது மக்களுக்கு ஒரு மாற்று தேவை இல்லை. பிறகு எப்படி வாக்களிப்பார்கள். கட்சி ஆரம்பித்து விட்டேன் என்பதற்காக எதிர்த்தால் சரியாக இருக்குமா?” என்றார். இறுதியில், தமிழகத்தில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று திமுக கூறுவது குறித்து கேட்பதற்கு "நல்ல டாக்டரை பார்க்க சொல்லுங்க" என கூறி அண்ணாமலை பேட்டியை நிறைவு செய்தார்.