சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதத்திற்குள் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை பிரபல நடிகர் விஜய் தொடங்கியது முதலே இந்த பரபரப்பு அதிகமாக உள்ளது.
முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு:
திமுக-வை அரசியல் எதிரி என்றும், பாஜக-வை கொள்கை எதிரி என்றும் விமர்சித்து அரசியலை முன்னெடுத்து வரும் விஜய், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தும் இதுவரை எந்த கட்சியும் அவருடன் கூட்டணியில் சேரவி்ல்லை.
அதேசமயம், விஜய் தரப்பினர் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தொடர் தகவல் வெளியாகி வருகிறது. நேற்று புதுச்சேரியில் பேசிய தவெக தலைவர் விஜய் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பாராட்டும் விதமாகவே பேசினார். புதுச்சேரி காவல்துறை அளித்த பாதுகாப்பு குறித்து பாராட்டினார்.
சாத்தியமா? அசாத்தியமா?
ஆளுங்கட்சியான திமுக-விற்கு கடும் சவால் அளிக்க வேண்டும் என்றால் அவர்களின் கூட்டணியை உடைப்பதே விஜய்யின் முதல் திட்டமாக உள்ளது. இதனால்தான் அவர்களது பக்கம் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரசை தங்கள் பக்கம் தொடர் நடவடிக்கையில் உள்ளார். அதேசமயம், பாண்டிச்சேரியில் பாஜக-வின் கூட்டணியில் உள்ள அனைத்திந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க வியூகம் வகுத்து வருகிறார்.
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கி பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடித்தவர் முதலமைச்சர் ரங்கசாமி. அவர் காங்கிரசுக்கு எதிராக பாஜக-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்துள்ளார். தற்போது வரை காங்கிரசும், என்ஆர் காங்கிரசும் விஜய் பக்கம் சாயவில்லை. இரண்டு கட்சிகளையும் தன் பக்கம் விஜய் இழுப்பது என்பது அசாத்தியமானது ஆகும்.
காத்திருக்கும் அரசியல் சதுரங்கம்:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தங்கள் பக்கம் வராவிட்டால், பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரசையாவது தங்கள் பக்கம் இழுக்க தவெக தீவிரம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்க தமிழ்நாட்டில் அரசியல் சதுரங்கம் எதிர்பாராத அளவு நகரும் என்றே கருதப்படுகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக-வில் இணைந்துள்ள நிலையில், அவரைப் போல பல அனுபவம் வாய்ந்த மற்றும் ஓரங்கட்டப்பட்ட அரசியல் தலைவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கவும் விஜய் முடிவு செய்துள்ளார். ஆனால், அவரது திட்டம் தவெக-வி்ற்கு பலன் அளிக்குமா? என்பதே தேர்தல் முடிவே வெளிப்படுத்தும். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தையையும் தமிழ்நாட்டில் பிற கட்சிகளுடனும் தீவிரமாக தவெக நடத்தி வருகிறது.