Udhayanidhi Pawan Kalyan: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது, அப்படி சொன்னவர்கள் தான் அழிந்துபோவார்கள் என கூறியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி, “அதையும் பொறுத்து இருந்து பார்ப்போம்” என பதிலடி தந்துள்ளார்.
பவன் கல்யாண் சொன்னது என்ன?
திருப்பதியில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “இங்கு நிறைய பேர் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறீர்கள். எனவே தமிழில் கூறுகிறேன். அண்டை மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் தலைவர் சனாதன தர்மம் வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று கூறினார். அவ்வாறு பேசுபவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன். சனாதன தர்மத்தை உங்களால் அளிக்க இயலாது. ஆனால் நீங்கள் அழிந்து போவீர்கள். சனாதன தர்மத்தை தாக்கிப் பேசுபவர்களை கண்டும் காணாமல் இருப்பது நல்லது இல்லை. நம்முடைய ராமரை தாக்கி பேசியவர்களை உற்சாகப்படுத்தினீர்கள். இதுபோல் செயல்படக்கூடாது அப்படி செய்யக்கூடாது” என கூறினார். அண்டை மாநில இளம் தலைவர் என குறிப்பிட்டது, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதியை தான் என கூறப்படுகிறது.
உதயநிதி சனாதன தர்மம் பற்றி பேசியது என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய உதயநிதி, “யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, எல்லாவற்றிற்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்தான். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும்” என பேசியிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நாடு முழுவதும் பேசுபொருளானது. பல மாநிலங்களில், உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டன. அதுதொடர்பான விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உதயநிதி பேசி ஒருவருடத்திற்கும் மேலான நிலையில், அவருடைய சனாதனம் தொடர்பான கருத்துக்கு பவன் கல்யாண் தற்போது மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.