தேர்தலுக்கு தயாரான தமிழகம்
சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் வெற்றிக்கான வியூகத்தை அமைத்து வருகிறது. ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கிளைக்கழகம் முதல் ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. கூட்டணியையும் பலப்படுத்தி வருகிறது. தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமகவையும் தங்கள் அணியில் இணைக்க திமுக ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
இதே போல எதிர்கட்சியான அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணியை உறுதிசெய்துள்ள நிலையில், பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க திட்டம்போட்டு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுவையும் அரசியல் கட்சிகள் பெற்று வருகிறது. இந்த நிலையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி மாநாடு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் நடத்தி வருகிறார். அடுத்ததாக திமுகவின் முக்கிய வாக்கு வங்கியான சிறுபான்மையின வாக்குகளை கைப்பற்ற திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார்.
கிறிஸ்துமஸ் விழா- விஜய் பங்கேற்பு
அந்த வகையில் திமுக அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதே போல நடிகர் விஜய்யும் கிறிஸ்மஸ் தின விழாவில் பங்கேற்கவுள்ளார். இது தொடர்பாக தவெக சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை (22.12.2025) சமத்துவ கிறிஸ்மஸ் தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாகவும், இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் விஜய்
தனியார் நட்சத்திர விடுதியில் உள்ளரங்க நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 1500 பேருக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் மட்டும் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் பெரிய நம்பிக்கையாக இருப்பது முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையின வாக்குகள் தான். அதில் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளை கைப்பற்ற குறிவைத்து விஜய் களம் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.