TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு முதற்கட்டமாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

தவெக பூத் கமிட்டி மாநாடு:

தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில்தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தவெக பூத் கமிட்டி மாநாடு - எங்கு? எப்போது?

தவெக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற தலைவர் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது, நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் (26.04.2025 & 27.04.2025) தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில், குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு புகிர்ந்துகொள்கிறேன்.

எந்தெந்த மாவட்டங்கள் பங்கேற்பு?

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும். இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும்  பங்கேற்பார்கள். அதன்படி முதல் நாளில், “ ஈரோடு கிழக்கு மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்டம், ஈரோடு மேற்கு மாவட்டம், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம், சேலம் மத்திய மாவட்டம், சேலம் வடமேற்கு மாவட்டம், சேலம் தெற்கு மாவட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்டம் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட முகவர்கள் பங்கேற்பர். 

இரண்டாவது நாளில், “ கரூர் மேற்கு மாவட்டம், கரூர் கிழக்கு மாவட்டம், கோவை மாநகர் மாவட்டம், கோவை தெற்கு மாவட்டம், கோவை கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் கிழக்கு மாவட்டம், கோவை புறநகர் வடக்கு மாவட்டம், திருப்பூர் மேற்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், திருப்பூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் மாநகர் மாவட்டம், நீலகிரி கிழக்கு மாவட்டம் மற்றும் நீலகிரி மேற்கு மாவட்ட முகவர்கள் பங்கேற்பர்.

விஜய் தலைமையில் மாநாடு:

இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்” என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விஜய் பேசப்போவது என்ன?

கருத்தரங்கில் பூத் கமிட்டி ஏஜெண்டுகள் எப்படி செயல்பட வேண்டும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது குறித்து, தவெக தலைவர் விஜய் ஆலோசனை வழங்குவார் என்பது அறிந்ததே. அதேநேரம், அரசியல் ரீதியாக விஜய் பேசப்போவது என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. கடந்த கட்சி நிகழ்வுகளில் திமுகவையே அதிகம் விமர்சித்து பேசி இருந்தார். அதிமுகவை பெரிதும் சீண்டாமலேயே இருந்தார். ஆனால், அண்மையில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வந்தபோது, அது ஒரு நிர்பந்த கூட்டணி என விஜய் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில் தான், விஜய் மீண்டும் நேரடியாக ஒரு அரசியல் நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இதிலும், அதிமுக மற்று பாஜக கூட்டணி குறித்து அவர் காட்டமாக பேசக்கூடும் என தெரிகிறது. மேலும், வக்பு திருத்தச் சட்டம் போன்ற விவகாரங்கள் குறித்தும் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக உடன் கூட்டணி?

இதனிடையே, பாமக  உடன் கூட்டணி குறித்து தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவதகாவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த பாமகவை, தங்கள் பக்கம் இழுக்கும் தவெகவின் முயற்சி தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஏதேனும் சமிக்ஞைகளை விஜய் வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் கட்சியினரிடையே நிலவுகிறது.