தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் சுமார் 30 நிமிடங்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மிக ஆக்ரோஷமாக பேசிய விஜய் சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசியதுடன் மு.க.ஸ்டாலின், மோடி ஆகியோரை நேரடியாக விமர்சித்தார்.
விஜயகாந்தை பாராட்டிய விஜய்:
இன்றைய அதிமுக-வை விமர்சித்த விஜய், அக்கட்சியைத் தொடங்கிய மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரை புகழ்ந்து பேசினார். எம்ஜிஆர் மட்டுமின்றி மறைந்த தேமுதிக தலைவரும், நடிகரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தை புகழ்ந்து பேசினார். மேலும், விஜயகாந்த் என் அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டு பேசினார்.
திரையுலகில் நடிகர் விஜய்க்கும், விஜயகாந்திற்குமான நெருக்கம் அனைவரும் அறிந்ததே ஆகும். ஏனென்றால், நடிகர் விஜய் திரை வாழ்வில் திருப்பம் தந்த செந்தூர பாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்து விஜயகாந்த் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றித் தந்திருப்பார். மேலும், விஜயகாந்தின் மறைவின்போது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது விஜய் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும் எப்போதும் விஜயகாந்தை பாராட்டியும், புகழ்ந்தும் பேசுவார்.
விஜய் போடும் கூட்டணி கணக்கு:
கட்சி தொடங்கிய பிறகு கடந்த ஓராண்டில் எந்தவொரு இடத்திலும் விஜயகாந்த் பற்றி பேசாத நடிகர் விஜய் நேற்று தனது மதுரை மாநாட்டில் முதன்முறையாக விஜயகாந்த் பற்றி பேசினார். விஜயகாந்த் பற்றி அவர் பேசியதன் பின்னணியில் கூட்டணி கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, கட்சி தொடங்கியதும் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று அதிரடியாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தாலும் யாரும் அவருடன் கூட்டணிக்கு சேரவில்லை.
கைகொடுக்காத திருமாவளவன்:
கட்சி தொடங்கிய விஜய் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் பிடிகொடுக்காமலே இருந்து வருவதுடன் திமுக-வுடனான கூட்டணியில் நீடிக்கும் முடிவிலே உள்ளார். இதனால், தன்னுடைய கூட்டணி கணக்கை விஜய் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாகவே விஜயகாந்தின் புகழை நேற்று நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் பாடியுள்ளார். இதனால், விஜயகாந்தின் தேமுதிக-விற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேமுதிக தற்போது வரை எந்த பக்கமும் இணையாமல் உள்ளனர். அவர்கள் அதிமுக-விடம் 30 தொகுதிகள் வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நிலையில், அவர்கள் இதுவரை சாதகமான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டணி வைப்பாரா பிரேமலதா?
இந்த நிலையில், விஜயகாந்தின் தேமுதிக-வை தங்கள் பக்கம் கூட்டணிக்கு அழைக்க விஜய் முடிவு செய்துள்ளார். மறைந்த விஜயகாந்திற்கு என்று தமிழ்நாட்டில் தனி செல்வாக்கு உள்ளது. தேமுதிக பலவீனமாக இருந்தாலும் விஜயகாந்தின் செல்வாக்கு வாக்குகளாக தேர்தல்களில் தேமுதிக-விற்கு சாதகமாக எதிரொலிக்கிறது. இதனால், தேமுதிக-வை கூட்டணியில் இணைத்தால் விஜயகாந்த் ஆதரவாளர்கள், தொண்டர்கள், ரசிகர்களின் வாக்குகள் தனக்கு விழும் என்று விஜய் முடிவு கணக்கிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த வியூகம் அவருக்கு கைகொடுக்குமா? அவருடன் தேமுதிக கரம் கோர்க்குமா? விஜயகாந்தை தம்பி என்றே கூறியுள்ள பிரேமலதா அவருக்கு பக்கபலமாக நிற்பாரா? என்றும் அடுத்தடுத்த மாதங்களில் தெரிய வரும்.