மக்களைக் காப்போம் தமிழகத்தை என மீட்போம் அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய தொகுதிகளில் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட குமரகோட்டம் முருகன் கோவில் அருகே திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் வந்திருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜயை விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி

இதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு முன் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக உழைத்து மண்ணில் இருந்து மறைந்தாலும் மக்களுக்காக வாழ்ந்ததால் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்கள். பூமி உள்ளவரை அவர்களுடைய புகழ் நிறைந்திருக்கும். மக்களின் அன்பை பெற்ற தலைவர்கள் நம்முடைய தலைவர்கள் என தெரிவித்தார்.

யாரெல்லாம் புதிய கட்சியை துவங்குகிறார்களோ நம்முடைய கட்சித் தலைவர்கள் படத்தை போன்று தான் தூவங்க முடியும். சில பேர் பேசுகிறார்கள், அதிமுகவில் யார் கையில் இருக்கிறது என கேட்கிறார்கள் பாவம் அறியாமை காரணமாக பேசுகிறார்கள் என பார்க்கிறேன். இதுகுறித்து தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறேன் என்று சொன்னால் அவரை நம்பி தொண்டர்கள் எப்படி இருப்பார்கள். சிந்தித்துப் பாருங்கள் என தெரிவித்தார். 

அண்ணா எம்.ஜி.ஆர்., கூட செய்யவில்லை..

அண்ணாவும் எம்ஜிஆரும் துவங்கியவுடன் ஆட்சியைப் பிடிக்கவில்லை.எந்தத் துறையில் உழைத்தாலும் ஏற்றம் பெறலாம். அரசியலில் அண்ணா திமுகவில் உழைத்தால் ஏற்றம் பெறலாம். வேறு எந்த கட்சியிலும் முடியாது. 

சிலர் மக்களிடம் செல்வாக்கு இருப்பதைப் போலவும், அவர்கள் தான் நாட்டை காப்பாற்றுவதை போலவும் அடுக்குமொழியால் பேசி வருகிறார். அவர் யார் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். என்னுடைய அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம் என தெரிவித்தார்.

அதிமுகவை யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது

சிலர் உழைப்பையே கொடுக்காமல், பலனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிலைக்காது. உழைத்தால் கிடைக்கும் அது தான் நிரந்தரம். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த சக்தி இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். தமிழ்நாட்டிலே அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அதிமுக. தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி செய்த அரசாங்கம் அதிமுக. அண்ணா திமுகவை எந்த ஊர் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என தெரிவித்தார்.

இந்த நாட்டில் யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம் அதற்கு தடை கிடையாது. அவர்கள் சாதித்தது என்ன என்பதை பார்க்க வேண்டும்.  ஒரு இயக்கம் என்று சொன்னால் எடுத்தவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது.  உழைப்பை கொடுத்தார்கள் மக்களிடம் நம்பிக்கை பெற்றார்கள், மக்கள் மனதில் இடம் கிடைத்தது அதனால் அவர்களால் நாட்டு மக்களுக்கு முதலமைச்சராக வர முடிந்தது  என தெரிவித்தார்.

"அரசியலில் எனக்கு வயது 51"

ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் எடுத்தவுடன் ஹீரோவாக வர முடியாது. சினிமாவிலேயே அப்படி என்றால் அரசியலில் எப்படி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஊழல் நடந்திருப்பதாக திமுக கவுன்சிலர்களை அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். திமுக கவுன்சிலர்களே திமுக மேயர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டு வந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்‌ என‌ தெரிவித்தார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்து அதன் மூலம் வருமானத்தை சம்பாதித்து ஓய்வு பெறும் நிலையில் அரசியலுக்கு வரவில்லை, ஆனால் 51 ஆண்டு அரசியலில் படிப்படியாக  பல்வேறு பதவிகள் பெற்று வந்தவன், எனக்கு எந்த அடையாளமும் இல்லை ஒரு விவசாயி, என்னுடைய பின் புலம் உழைப்பு,  விசுவாசம், சேவை இதற்கு கடைத்துதான் தான் பொதுசெயலாளர் பதவி என தெரிவித்தார்.