TVK Vijay: பெரியார் குறித்து சர்ச்சை கருத்து - நிதியமைச்சருக்கு வருத்தமா? தவெக. விஜய் கேள்வி!
TVK Vijay: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியார் பற்றி பேசியதற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியார் பற்றி பேசியது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியார் பற்றி பேசியது பேசுபொருளாகியுள்ளது. அதற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “ தமிழை காட்டுமிராண்டி மொழி என விமர்சித்த ஒருவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறீர்கள். நான் அவர் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், இது யார் சொன்னது என்று தெரியும். அவரை திராவிட தலைவர் எனப் போற்றுகிறார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.
தேசிய கல்வி கொள்கை மூலம் இந்தியை திணக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரமும் தென் மாநிலங்களில் பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு விவகாரங்களுக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பேசியதற்கு மத்திய கல்வி அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளானது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இவர்களுக்கு நேர்மை இல்லை. தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கின்றனர். மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்" என கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகு, அவரது கருத்து புண்படுத்தும்படி இருந்தால் 100 கூட மன்னிப்பு கேட்பதாக தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஏன்?
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு கண்டனம் தெர்வித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?
முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?
குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு? பெரியார் போற்றுதும்!
பெரியார் சிந்தனை போற்றுதும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.