நீலகிரி மாவட்டம் முதுமலையில் சட்டவிரோதமாக இயங்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் வனத்துறை அமைச்சர்  மதிவேந்தன் குடும்பத்தோடு தங்கி, விடுமுறையை  கழித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.



உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மூடப்பட்ட ரிசார்ட்டுகள்


மசினகுடி, முதுமலை, பொக்காபுரம் பகுதிகளில் யானை வழித்தடத்தில் சட்டவிரோதமாக, அத்துமீறி, ரிசார்டுகள், தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், விதிகளை மீறி செயல்படும் ரிசார்டுகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை பின்பற்றி, அப்போதைய ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா அதிரடியாக 36 ரிசார்டுகளை மூடி சீல் வைத்தார்.


செய்தியை அறிய முனைந்த செய்தியாளர்கள்


அப்படி உச்சநீதிமன்ற உத்தரவால் சட்டவிரோத கட்டுமானம் என அறிவிக்கப்பட்டு பகுதியாக மூடி, சீல் வைக்கப்பட்ட ஒரு ரிசார்ட்டில்தான் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் குடும்பத்தோடு தங்கி, விடுமுறையை கொண்டாடியதாக செய்தி வெளியானது. இது குறித்து ஆங்கில நாளேடு ஒன்று செய்தியை பிரசுரிக்க, மற்ற செய்தியாளர்களும் இந்த செய்தி குறித்து அறிய முனைந்தனர். 


அரசு அதிகாரிகள் சொல்வது என்ன ?


அமைச்சர் மதிவேந்தன் தங்கிய, தனியார் ரிசார்டை முழுமையாக மூடவோ அல்லது அதனை இடித்து தள்ளவோ உச்சநீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லையென்றும் பகுதியாக அந்த ரிசார்ட் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்ததாலேயே அவர் அங்கு சென்று தங்கினார் என்றும், இது எந்த வகையிலும் சட்டவிரோதம் இல்லை என்றும், விதிகளை பின்பற்றியே அமைச்சர் செயல்பட்டார் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


வனத்துறை விருந்தினர் விடுதியில் அமைச்சர் தங்காதது ஏன் ?


ஆனால், முதுமலையில் வனத்துறை சார்பில் விருந்தினர் இல்லங்கள் நடத்தப்படும் நிலையில், வனத்துறை அமைச்சராக இருக்கும் மதிவேந்தன் ஏன் அங்கு சென்று தங்காமல், தனியார் ரிசார்ட்டில் தங்கினார் என்றும் யானை வழித்தடைத்தை பாதுகாக்கும் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசு விருந்தினர் மாளிகைக்கு அமைச்சர் மதிவேந்தன் செல்லவில்லை என்பதை அவரது தரப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.


வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் விளக்கம் என்ன ?


இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு தொடர்புகொண்டபோது,  தான் தங்கியிருந்த ரிசார்ட் சட்டவிரோதமாக செயல்படவில்லை என்றும் அது மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு, விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறது என்று விளக்கம் அளித்தார். அதோடு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வனத்துறை விருந்தினர் இல்லத்திற்கு செல்லவில்லை என்றும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 


வனத்துறையில் இருந்து மாற்றப்பட்ட அமைச்சர் ராமசந்திரன் 


திமுக ஆட்சி அமைந்தபோது ஊட்டியை சேர்ந்த ராமசந்திரன் வனத்துறை அமைச்சராகவும், மதிவேந்தன் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம் மேடநாட்டில் இருக்கும் அமைச்சர் ராமசந்திரன் மருமகன் எஸ்டேட்டில் விதிகளை மீறி மலையை குடைந்து சாலை அமைத்ததாக பரபரப்பு புகார் எழுந்த நிலையில், அவரது இலாக்கா மாற்றப்பட்டு, ராமசந்திரனிடம் இருந்த வனத்துறை மதிவேந்தனுக்கும், மதிவேந்தனிடம் இருந்த சுற்றுலாத்துறை ராமசந்திரனுக்கும் மாற்றிக் கொடுக்கப்பட்டது.


அமைச்சர் மதிவேந்தன் மருத்துவராகவும் துடிப்பானவராகவும் அர்ப்பணிப்போடு பணியாற்றுபவராகவும் இருந்ததாலேயே அவருக்கு வனத்துறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது