பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்குபெற்ற பின்னர், சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்த கூட்டணி இறுதி வரை உறுதியாக இருக்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தியதாக கூறினார். 


பீகார் மாநிலம் பாட்னாவில் பிகார் முதலமைச்சர்,  நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 3:30 மணி வரை நடைபெற்றது.  


இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சென்னை திரும்பிய முதலமைச்ச மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எதிர்க்கட்சிகளின் கூட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்துள்ளது. பாஜக என்ற ஒற்றைக் கட்சிக்கு எதிரான கூட்டமாக இது இருந்து விடக்கூடாது, ஜனநாயகத்தை, மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை ஏழை எளிய மக்களை காக்க வேண்டுமானால், பாஜக மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தெளிவாக இருக்கிறோம் என கூறினார். 


அதேபோல், அந்தக் கூட்டத்தில், “ இந்த கூட்டணி இறுதி வரை உறுதியாக இருக்கவேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். 2023ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி, கூட்டத்தைக் கூட்டினார்கள், 2024ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்கள் என்பது தான் வரலாறாக இருக்க வேண்டும் என அழுத்தமாக பேசினேன். மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணிதான் தமிழ்நாட்டில் அனைத்து வெற்றிகளுக்கு காரணம். அதேபோல் அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம்” என எடுத்துக்கூறியதாக  கூறினார். 


மேலும், அந்த கூட்டத்தில், ”எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்த கட்சித் தலைமையில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால், தொகுதி பங்கீடு மட்டும் செய்துகொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்று சொன்னால், பொது வேட்பாளர் அறிவித்துக்கொள்ளலாம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. அரசியல் கட்சிகளிடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்படவேண்டும். இதுபோன்ற 7 பிரச்னைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்படவேண்டும்” என அவர் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 


மேலும் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, பாட்னாவில் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் போனதற்கு காரணம், வானூர்திக்கு நேரம் ஆகிவிட்டது என்பதால் தான், உடனே புறப்பட்டேன். அதில் வேறு எந்த காரணமும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.