தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செஞ்சி மஸ்தான். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகிக்கும் அண்ணாமலை செஞ்சி மஸ்தான் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் காரில் அமர்ந்தபடியே அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொதுமக்களுக்கு 100,100 ரூபாயாக வழங்குகிறார், வயதான மூதாட்டி, இளைஞர் ஒருவர், சிறுவன் ஒருவன் என பலரும் அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நன்றி கூறுகின்றனர். பணத்தை வழங்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான், " ஆளைப் பாத்து அனுப்புனாதான்... நீ ஆளைப் பாத்து அனுப்புனாதான்.." என்று கூறிக்கொண்டே பணத்தை வழங்குகிறார்.




இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “ தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மக்களுக்கு ரூபாய் 100 வீதம் கொடுக்கிறார். நெரிசலான சந்திப்பில் தினமும் 300 பேர் இருக்கிறார்கள். அமைச்சராக இருந்து சம்பாதித்த பணம், ஒருபகுதி சார்பு நிலையை பராமரிக்க இப்படி பழங்குகிறதா? அரசாங்கம் தோல்வியடையும்போது, இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அண்ணாமலை பதிவிட்ட இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  






வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் 2015ம் ஆண்டிற்கு பிறகு மோசமான நிலைமை உருவாகியது. தி.நகர், வேளச்சேரி, அரும்பாக்கம், அமைந்தகரை, கோடம்பாக்கம், கே.கே.நகர். கொளத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை என்று பல பகுதிகளிலும் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிவருவதுடன், தற்போது வரை வடியாமல் அப்படியே தேங்கியுள்ளது.




சாலைகள் மட்டுமின்றி பல பகுதிகளில் குடியிருப்புகளிலும் கழிவுநீருடன் கலந்து மழைநீர் புகுந்து வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவதிக்குள்ளாியுள்ளனர். சென்னை மக்களின் இந்த சூழலுக்கு வானிலை எச்சரிக்கைக்கு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்காததே காரணம் என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அதன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இந்த சூழலில்தான், செஞ்சியில் அமைச்சர் மஸ்தான் பொதுமக்களுக்கு ரூபாய் 100 வழங்கும் வீடியோவை வெளியிட்டு, தி.மு.க. அரசு தோல்வியடைந்த காரணத்தாலே இதைச்செய்கிறது என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ குறித்து தி.மு.க. தரப்பிலோ, செஞ்சி மஸ்தான் தரப்பிலோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண