தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய மானியக் கோரிக்கையின் போது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழறிஞர்கள் பலருக்கு சிலை இல்லை, மணிமண்டபம் இல்லை. பல ஆண்டுகள் கோரிக்கை வைத்து வருகிறேன். இதற்கான பதிலானது அடுத்த கூட்டத்தொடரிலாவது கிடைக்க வேண்டும் என முதலமைச்சரிடமும், தமிழ்நாடு அரசிடம் கணிவோடு கேட்கிறேன் என தெரிவித்தார். 


முதலமைச்சர் அவையில் இல்லாத காரணத்தால்தான் செய்திகள் வாயிலாக தெரிவிக்கிறேன் என  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான வேல்முருகன் தெரிவித்தார்


பேரவை கூட்டத் தொடரின் போது , பேரவைத் தலைவர் அப்பாவுடன் முரண்பாடு ஏற்பட்டதாக, சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு வேல்முருகன் கூறியதாவது, பேரவைத் தலைவர் என்னை பேச அனுமதித்தார். 15 நிமிடம் கொடுத்தார். அதை நான் குறை சொல்லவில்லை. ஆனால், ஒரு பாயிண்ட் பேசும் போது முழுமையாக பேச அனுமதிக்கப்பட வேண்டும். பேசும் போதே அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிறார், எந்த விதத்தில் நியாயம்.


சிறை குறித்து பேசும் போது , ஏன் சிறை குறித்தே பேசுகிறாய் என்று கேட்கிறார். சிறைத் துறை மானியத்தின் போது, சிறை குறித்துதான் பேசுவாங்க, வேறு என்ன பேசுவாங்க.? காமெடியாக ,அவையை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, மாண்புக்கு மாறாக  பேரவைத் தலைவர் நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது.


இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரான வேல்முருகன், அவைத்தலைவர் அப்பாவு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளது பெரும் பேசு பொருளாகி வருகிறது.


சில தினங்களுக்கு முன்பு , அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் பேரவைத் தலைவர் இடையேயான உரையாடலானது, பேசு  பொருளான நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகனுக்கும் , பேரவைத் தலைவர் அப்பாவுக்கும் இடையேயான பேச்சுக்களானது சர்ச்சையாகியுள்ளது.