சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 2022-ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை நிதியாண்டில் எடப்பாடி நகராட்சி, ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம், பேரூராட்சி, ஜலகண்டாபுரம் பேரூராட்சி, வனவாசி பேரூராட்சி, நங்கவள்ளி பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் தாரமங்கலம் நகராட்சி ஆகியவற்றில் 7 கோடியே 56 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். குறிப்பாக நியாய விலைக்கடை கட்டிடம், சாலை வசதி, சாக்கடை கால்வாய் வசதி, சின்டெக்ஸ் டேங்க் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசியது, "எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 27 முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் கொடுக்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில் புதிதாக 35 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சிறு சிறு வேலைகளாக இருந்தாலும், மக்கள் சந்திக்கும்போது வைக்கின்ற கோரிக்கை அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தொகுதி மக்கள் கொடுக்கின்ற பிரச்சனைகளில் தீர்க்கவேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நிறைய பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டிற்கு முன்பாக எடப்பாடி சட்டமன்ற தொகுதி எப்படி இருந்தது என்று ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட பணிகளை ஏராளமாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி ஆகியவற்றில் தங்கு தடையின்றி காவிரி தண்ணீரை அதிமுக அரசாங்கம் தான் கொடுத்தது. ஏழை, எளிய மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் எடப்பாடி தொகுதியில் பிரமாண்டமான முறையில் உயர்கல்வி படிக்கும் வகையில் கல்லூரி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதைபோன்று பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டது. கிராமங்களில் கூட சிறப்பான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் மூடு விழா செய்யப்பட்டுவிட்டது என்று கூறினார்.
திமுக ஆட்சியில் நூறு ஏரிகள் நிரப்பும் திட்டம் ஆமை வேதத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் நிரம்பி உள்ளது. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அனைத்து ஏரிகளும் நிரப்பப்பட்டு நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் நீர் நிறைந்த பகுதியாக உருவாக்கப்படும் என்றார். தமிழக முழுவதும் அற்புதமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் சாலைகள், புதிய மருத்துவமனை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது" என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பின்னர் எடப்பாடி நகரில் உள்ள ஆய்வு மாளிகைக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி நகர அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.