அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பி.,யுமான அன்வர்ராஜாவை நேற்று இரவு 10:40 மணிக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீக்கி உத்தரவிட்டனர். 


இன்று காலை அதிமுகவின் செயற்குழு கூடவிருக்கும் நிலையில், அவசர அவசரமாக நேற்று இரவில் அன்வர்ராஜாவை நீக்க காரணம் என்ன? காரணம் இருக்கிறது என்கிறார்கள்...


கடந்த முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த போது, எல்லாம் சுமூகமாக போய் கொண்டிருந்தது. அப்போது தான் அன்வர்ராஜாவின் டாபிக் இழுக்கப்பட்டு, அவரை வெளியேற்ற கூறும் அளவிற்கு எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான இபிஎஸ்-யை ஒருமையில் பேசிய விவகாரம் தான் அன்றைய தினம் எழுப்பப்பட்டது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எழுப்பிய அந்த பிரச்சனை, அதன் பின் பூதாகரமாக கிளம்பியது. 


அப்போது சமரச முயற்சியில் ஈடுபட்ட இபிஎஸ், இது குறித்து அன்வர்ராஜா என்னிடம் விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறியும், அன்வர்ராஜாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவரை பிரச்சனை இல்லை, கூட்டத்திற்கு பின் டிவி சேனல்களில் அன்வர்ராஜா அளித்த பேட்டி தான், அதன் பின் புயலாக வீசியது. குறிப்பாக, ‛சசிகலா என்றைக்குமே எங்களுக்கு சின்னம்மா தான்’ என்கிற பேட்டியும், ‛பாஜக கூட்டணியை நான் உட்பட யாரும் விரும்பவில்லை,’ என்கிற பேட்டியும் தான், இத்தனை சிக்கலுக்கும் காரணம்.






சேனல்களுக்கு அளித்த பேட்டிகள் ஒளிபரப்பி நாள் கணக்கில் ஆன பிறகு தான் நீக்க நடவடிக்கை நடந்துள்ளது. அதுவும் இரவில், அவசரமாக. அதற்கும் காரணம் உள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகி என்கிற முறையில் அன்வர்ராஜாவும் செயற்குழுவில் பங்கேற்க இருந்தார். கடந்த முறை மாவட்ட செயலாளர் கூட்டத்திலேயே அன்வர்ராஜாவை அடிக்க பாய்ந்தார்கள் என்கிற செய்தி பரவியது. இந்நிலையில், அவர் தெரிவித்த கருத்துக்கள், செயற்குழுவில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக தலைமைக்கு தகவல் வந்தது. 


கடந்த முறையை விட பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பும் என்றும் தெரியவந்தது. அது மட்டுமின்றி அன்வர்ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் செயற்குழுவை ஸ்தம்பிக்க வைப்போம் என தலைமைக்கு சில முன்னாள் அமைச்சர்கள் நேரடியாகவே கூறியுள்ளனர். இதுஒருபுறமிருக்க மற்றொரு காரணமும், அதிமுக தலைமையிடம் இருந்தது.


கடந்த முறை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தான், அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் , முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி ஆகியோர் பாஜக செயற்குழு சென்று அங்கு பாஜகவில் இணைந்தனர். அதே போல், அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் நாளான்று, அதிமுகவின் முக்கிய நிர்வாகியான அன்வர்ராஜாவை, திமுகவில் இணைக்க திட்டமிட்டிருந்ததாக அதிமுக தலைமைக்கு தகவல் வந்துள்ளது. அதன் காரணமாக தான் அவசர அவசரமாக அன்வர்ராஜாவை நீக்கியுள்ளனர் என்கின்றனர். 




நவம்பர் 28 ம் தேதி தான் ராமநாதபுரத்தில் அமமுகவை சேர்ந்த 200 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் அன்வர்ராஜா பங்கேற்றார். அடுத்த இரண்டாவது நாளில் அவர் கட்சியில் இருந்து நீ்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.